தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து ஹீரோவாக வெற்றிகளை கொடுத்து வருகிறார். முதல் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த நிலையில் இரண்டாவது படத்தை அவர் இயக்கினாலும் அதில் அவர்தான் ஹீரோவாக நடித்தார்.
லவ் டுடே என்ற பெயரில் அந்த படத்தை வெளியிட்ட பிரதீப் இளைஞர்களின் நாயகனாக மாறினார். அந்த அளவுக்கு லவ் டுடே திரைப்படம் இளைஞர்களின் படமாக அமைந்தது தான் சிறப்பு. தொடர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான டியூட் திரைப்படம் கூட பல விமர்சனங்களை சந்தித்தாலும் இளைய தலைமுறைகள் அந்த திரைப்படத்தை பெரிய அளவில் கொண்டாடி தீர்த்தனர்.
இளைஞர்களின் பல்சை பிடித்து பார்த்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பிரதீப். அவருடைய கதைகள் தேர்வாகட்டும் திரைக்கதையாகட்டும் மற்ற இயக்குனர்களிடம் இருந்து வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் கல்லூரியில் படிக்கும் பொழுது அவருடைய ஆசிரியை ஒருவர் தேவை இல்லாமல் கதை எழுதாதே என தேர்வு பேப்பரில் எச்சரித்து அனுப்பிய அந்த தேர்வு பேப்பரை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
அவர் கல்லூரியில் படிக்கும் பொழுது தேர்வு நேரத்தில் தன்னுடைய தேர்வு பேப்பரில் கேள்விக்கு பதில் எழுதும் பொழுது தேவையில்லாமல் சில கதைகளையும் சேர்த்து எழுதியுள்ளார். அதை வாசித்துப் பார்த்த அவருடைய ஆசிரியை சிவப்பு மையினால் கதை எழுதாதே என எச்சரித்து எழுதியுள்ளார். அதை இப்போது பகிர்ந்து வைரல் ஆக்கி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஆனால் சமீபத்தில் மாநில விருது தேர்வில் சிறந்த கதை எழுத்தாளருக்கான தமிழ்நாடு அரசு விருதை பிரதீப் ரங்கநாதன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












