varanasi

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஆந்திராவில் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகன் இவர் என்பதால் இவரை ஆந்திர சினிமா உலகமும், ரசிகர்களும் Prince (இளவரசர்) என அழைக்கிறார்கள்..

இவரின் ஒக்கடு படத்தைதான் தமிழில் விஜய் கில்லியாக நடித்தார்.. போக்கிரி படமும் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படம்தான். போக்கிரி படத்தில் மகேஷ்பாபுவின் உடல் மொழியைத்தான் விஜயும் பின்பற்றியிருந்தார். மகேஷ்பாபு தற்போது ராஜமௌலி இயக்கிவரும் வாரணாசி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. ஏனெனில், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களை கொடுத்தவர் ராஜமௌலி. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் பேசப்பட்டது..

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய மகேஷ் பாபு ‘வாரணாசி படத்தில் நான் ராமன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.. அதற்காக என்னை மொத்தமாக மாற்ற வேண்டியிருந்தது.. ஆறு மாதங்கள் பயிற்சி செய்து எனது நடை, ஓட்டம், உடல் மொழி எல்லாவற்றையும் மாற்றினேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்ததை பார்த்தபோது எனக்கு திருப்தியாக இருந்தது..

ராஜமௌலி என்னிடம் கதை சொன்ன போது அது மிரட்டலாக இருந்தது. வீட்டிற்கு சென்று என் மனைவியிடம் அவர் சொன்ன கதையை சிலாகித்து பேசினேன். ஏனெனில் ஒரு வித்தியாசமான, புதிய, தைரியமான முயற்சியை ராஜமௌலி செய்து வருகிறார். கண்டிப்பாக வாரணாசி ரசிகர்களுக்கு வேறு மாதிரியான அனுபவத்தை கொடுக்கும்’ என்று சொல்லி ஹைப் ஏற்றியிருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.