சூப்பர்ஸ்டார் ரஜினியின் உறவினர் மகன் அனிருத். சிறுவயது முதலே இசையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது நிறைய இசை நிகழ்ச்சிகளில் கீ போர்டு வாசிக்கும் பழக்கம் இவருக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டபின் அவருக்கும், அனிருத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அனிருத்திடம் இருக்கும் இசையறிவை தெரிந்துகொண்டார் தனுஷ். இருவரும் இணைந்து ‘ஒய் திஸ் கொலவெறி’ என்கிற பாடலை உருவாக்கி யுடியூப்பில் வெளியிட அந்த பாட்டு சூப்பர் ஹிட் அடித்து உலகமெங்கும் பிரபலமானது. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர்.
அதன்பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் அனிருத் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் தொடர்ந்து தனுஷ் நடிக்கும், தயாரிக்கும் படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார் அனிருத். அவரின் வருகையால் ஏ.ஆர்.ரகுமான இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை கூட குறைந்து போனது.
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தார் அனிருத். சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் இசை காரணமாக இருந்தது. தற்போது அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க 15 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அனிருத் ‘சின்ன வயசுல கல்யாணத்துக்கு வாசிக்க வேலைக்குப் போனப்போ 500 ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க.. சில நேரம் அது கூட கொடுக்க மாட்டாங்க.. வெறும் வெத்தலை பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பிடுவாங்க.. இப்ப இவ்வளவு கோடி சம்பாதித்தாலும் அந்த சந்தோஷம் கிடைக்கிறது இல்லை’ என சொல்லியிருக்கிறார்..





