
Cinema News
Dhanush: இட்லி வாங்க கூட காசு இல்லையா? அதெப்படி சார்? தனுஷிடம் தைரியமாக கேட்ட கோபிசுதாகர்
Dhanush:
தனுஷ் நடிப்பில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் திரைப்படம் இட்லி கடை. இந்தப் படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. சரியான ரிலீஸ் தேதியைத்தான் படக்குழு லாக் செய்திருக்கின்றனர். தொடர்ந்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என விடுமுறை தினம் என்பதால் அந்த வாரம் ஒரு பெரிய தொகையை இந்தப் படம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
மெயின் வில்லன்:
இட்லி கடை படத்தை பொறுத்தவரைக்கும் தனுஷே இயக்கி அதில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் மெயின் வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு ஒரு வெயிட்டான வில்லன் ரோலுக்காக காத்திருந்தேன். அது இட்லி கடை படத்தின் மூலமாக கிடைத்துள்ளது என அருண் விஜய் கூறினார். அதனால் அவரின் கேரக்டரும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் கேரக்டராகத்தான் இருக்கும்.
மேலும் படத்தில் பார்த்திபன் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கிரண், சமுத்திரக்கனி என முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். படத்தின் புரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ் நாட்டில் இருக்கும் பல ஊர்களுக்கு சென்று படத்தை தனுஷ் புரோமோஷன் செய்து வருகிறார். இதுவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
கட்டுக்கதையா?
மதுரை, கோவை , நேற்று திருச்சி என புரோமோஷனை நடத்தியிருக்கிறார். ஏற்கனவே மதுரையில் அவர் பேசிய சில விஷயங்கள் மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாக இருந்தாலும் விமர்சனத்திற்கும் ஆளானது. மதுரையில் இருந்து சென்னைக்கு தன் அப்பா பொழப்ப தேடி வரும் போது அவர் பட்ட கஷ்டங்கள், பணம் இல்லாமல் அவர் பட்ட வேதனை, பின் கர்ப்பமாக இருந்த தன் மனைவியுடன் நடந்தே சென்றது என அவர் சொன்ன கதை நம்பும்படியாகவே இல்லை என்று சோசியல் மீடியாக்களில் ட்ரோலாக பேசப்பட்டது.
இதையெல்லாம் தாண்டி ஆரம்பகாலங்களில் நாங்கள் இட்லி வாங்க கூட காசு இல்லாமல் இருந்தோம் என தனுஷ் கூறியதுதான் அனைவரையும் தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் தனுஷ் சின்ன வயதாக இருக்கும் போது அவருடைய அப்பா இயக்குனராகத்தான் இருந்தார். பின்ன எப்படி இவர் கஷ்டப்பட்டிருப்பார் என்று அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தேகத்தை யுடியூப் பிரபலம் கோபி சுதாகர் தீர்த்து வைத்திருக்கின்றனர்.
நம்புற மாதிரியே இல்லையே?
நேற்று திருச்சியில் நடந்த புரோமோஷன் விழாவிற்கு கோபியும் சுதாகரும் வந்து தனுஷிடம் சில கேள்விகளை கேட்டனர். அதில் இந்த கேள்வியும் ஒன்று. அதாவது ‘சார். நீங்க இட்லி வாங்க ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று சொன்னீர்கள். அதெப்படி சார்? அப்பவே உங்க அப்பா இயக்குனராக இருந்தாரு இல்லையா?’ என்று தலையை சொறிந்து கொண்டே கேட்டனர். அதற்கு தனுஷ் விளக்கமாக கூறினார்.
நான் பொறந்தது 1983. எங்க அப்பா 1991ல் தான் இயக்குனராக வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் வறுமையில்தான் இருந்தோம். மொத்தம் 4 பிள்ளைகள். 1994க்கு பிறகுதான் ஓரளவு வசதி வந்தது. அதுவரைக்கும் அங்க இருந்த வயல்வெளிகள் , தோட்டத்தில் வேலைபார்த்து அதில் வரும் பணத்தை வாங்கித்தான் இட்லி வாங்கி சாப்பிடுவோம் என்று கூறினார் தனுஷ்.