
latest news
கரூரில் 39 பேர் மரணம்!.. தவெக தலைவர் விஜய் செய்த தவறு என்ன?!.. ஒரு அலசல்!…
Karur: நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விஜய் இப்போதுதான் அரசியலை கற்று வருகிறார். விக்கிரவாண்டியில் முதல் மாநாடும் மதுரையில் இரண்டாவது மாநாடும் சிறப்பாகவே நடந்தது. இந்த இரண்டு மாநாடுகளிலும் 8 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கும் விஜய் கடந்த 13ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சி, அரியலூர் பகுதியிலும் 20ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கும் சென்றார். நேற்று நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளுக்கு சென்றபோதுதான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அனுமதி கொடுக்காத காவல்துறை:
கரூரில் விஜய் பேசுவதற்காக தவெகவினர் அனுமதி கேட்ட இடம் லைட் ஹவுஸ் பகுதி. ஆனால் போலீசார் அனுமதி கொடுத்த இடம் வேலுச்சாமிபுரம். விஜய் மீது எந்த தவறும் இல்லை. அவர் அனுமதி கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. தண்ணீர் வசதி கூட இல்லை என கரூர் மக்கள் போலீசாரை குற்றம் சொல்கிறார்கள். போலீஸோ ‘இதே இடத்தில்தான் 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். நாங்கள் சொன்ன விதிமுறைகளை தவெகவினர் பின்பற்றவில்லை. 10 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிபார்க்கப்பட்ட நிலையில் 27 ஆயிரம் பேர் வரை கூடி விட்டார்கள்’ என விளக்கம் அளித்திருக்கிறது.

விஜயை பிடிக்காதவர்கள் மற்றும் திமுகவினர் ‘இதற்கு முழுக்க முழுக்க விஜயே பொறுப்பு’ என விமர்சனம் செய்து வருகிறார்கள். விஜய்க்கு ஆதரவாளர்கள் ‘இதில் விஜயின் தவறு எதுவும் இல்லை. இது திட்டமிட்டு செய்த சதி. துயர சம்பவம் நடந்த உடனேயே செந்தில் பாலாஜி எப்படி மருத்துவமனைக்கு வந்தார்?. இந்த திட்டமிட்ட நாடகம்’ என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.
விஜய் செய்த தவறு:
எப்படி இருந்தாலும் கரூர் விவகாரத்தை பொருத்தவரை விஜய் செய்த தவறு என்ன என்பதை பார்ப்போம். விஜய்க்கு நாமக்கல்லில் பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்திருந்த நேரம் காலை 8.45. ஆனால் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து கிளம்பிய போது காலை 8.30. அதன்பின் அவர் தனி விமான மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் நாமக்கல் வந்தார். காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பேச வேண்டும் எனில் விஜய் அதிகாலையிலேயே கிளம்பி இருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதுவே விஜய் செய்த பெறும் தவறாக மாறிவிட்டது.

நாமக்கல்லில் 3 மணிக்கு பேசிய விஜய் அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கரூருக்கு வந்த போது இரவு 7 மணி ஆகிவிட்டது. ஆனால் கரூரில் விஜய் பேச போலீசார் அனுமதி அளித்திருந்த நேரம் மதியம் 12.30. விஜய் 12.30க்கே வந்துடுவார் என்பதால் காலை 11 மணி முதல் அவரை காண மக்கள் அங்கு கூடிவிட்டனர். எனவே பல மணி நேரம் வெயில் நிற்க வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் வெயில் தாங்க முடியாமல் பலரும் அங்கிருந்து நகர முயன்றனர். ஆனால் ‘விஜய் இப்போது வந்துவிடுவார்’ என சொல்லி அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியே விடவில்லை.
உயிரிழந்தது எப்படி?:
அதோடு அந்த கூட்டத்திலிருந்தும் அவர்களால் வெளியேற முடியவில்லை. 6 மணிக்கு மேல் பலர் நிலைமை மோசமாகிவிட்டது. இரவு 7 மணி அளவில் விஜய் அந்த சாலைக்கு வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அது குறுகிய சாலை என்பதால் சாலையில் பெரும்பாலான இடத்தை விஜயின் வாகனம் எடுத்துக் கொண்டது. இதனால் அங்கு நின்றிருந்த மக்கள் இரண்டு பக்கங்களிலும் நகரவே கூட்ட நெரிசலில் பலரும் சிக்கி இருக்கிறார்கள். அதில் பலரும் சாலையோரம் இருந்த சாக்கடையில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து மயக்கம் அடைந்திருக்கிறார்கள். இதில் சோகம் என்னவெனில் விஜய் 15 நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பிறகுதான் சாக்கடையில் விழுந்தவர்களை தூக்கி இருக்கிறார்கள். இது மிகவும் சோகமானது. இதனால்தான் 29 பேர் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள் சேர்த்து மொத்தமாக 39 பேர் உயிரிழந்துவிட்டனர்.

நேரத்தை கடைபிடிக்காத விஜய்:
விஜய் சரியான நேரத்திற்கு சென்று பேசியிருந்தால் இந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். ஒரு பக்கம் விஜய் சரியானதுக்கு போக வேண்டும் என்று நினைத்தாலும் அவரது வாகனத்தை சுற்றி தவெகவினரும் விஜய் ரசிகர்களும் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் ஒட்டியபடி வருவதால் விஜயின் வாகனம் மிகவும் மெதுவாகவே ஊர்ந்து வந்தது. இதனால் காலதாமதம் ஆகிறது என தவெகவினர் சொல்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் விஜய் சென்னையில் இருந்து அதிகாலையில் கிளம்பி இருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் சம்பவம் பற்றிய உடனே விஜய்க்கு தெரிவிக்கப்பட்டும் அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க கரூர் மருத்துவமனைக்கு செல்லாமல் அங்கிருந்து வேகமாக சென்னை கிளம்பி சென்றதும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.