
latest news
TVK Vijay: விஜயின் பிரச்சார வேன் விரைவில் பறிமுதல்?.. போலீஸ் அதிரடி நடவடிக்கை…
Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவக்கி அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்துள்ள விஜய் சமீபத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்திப்பதை துவங்கினார். திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் விஜய் சென்று பேசினார். ஆனால், கடந்த சனிக்கிழமை அவர் கரூர் சென்றபோது நேர்ந்த சம்பவம் அவரின் அரசியல் வாழ்வில் கரும்புள்ளி போல அமைந்துவிட்டது.
மதியம் 12.30 மணிக்கு விஜய் அங்கு வருவார் என சொல்லப்பட்ட நிலையில் இரவு 7 மணிக்குதான் சென்றார். காலை முதலே அவரை பார்க்க மக்கள் கூடிவிட்டனர். அதோடு, நேரம் போகப்போக கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் கூடியிருந்த நிலையில் விஜய் அங்கு சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் கீழே விழுந்து மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துவிட்டனர்.
ஆனால், இந்த சம்பவம் விஜய் எந்த வருத்தமும் தெரிவிக்காமல் சென்னை கிளம்பி சென்றுவிட்டார். அதோடு, தவெக கட்சி முக்கிய நிர்வாகிகளும் தலைமறைவாகி விட்டனர். இதைத்தொடர்ந்து விஜயை திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 3 நாட்களுக்கு பின் விஜய் வெளியிட்ட வீடியோவில் ‘கரூரில் மட்டும் இப்படி நடந்துவிட்டது. இதற்கு யார் காரணம் என்பது விரைவில் தெரியவரும். சி.எம். சார்.. என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் கட்சி நிர்வாகிகளை எதுவும் செய்ய வேண்டாம்’ என பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி செந்தில்குமார் விஜயையும், அவரின் கட்சி நிர்வாகிகளையும் விமர்சித்தார். தொண்டர்களையும், மக்களையும் விட்டுவிட்டு கட்சி தலைவரும், நிர்வாகிகளும் சென்றுவிட்டனர். விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. இப்படி ஒரு அரசியல் கட்சியா?. இதுவரை சம்பவத்திற்கு பொறுப்பும் ஏற்கவில்லை. விஜய் மீது ஏன் வழக்கு தொடரவில்லை? என தமிழக அரசிடம் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், விஜய் பயன்படுத்திய வாகனத்தின் உள்ளே, வெளியே இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரிக்க வேண்டும். விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். எனவே, விரைவில் விஜய் பயன்படுத்திய பிரச்சார வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.