
Box Office
Idli kadai: ஒரு வாரத்தில் 50 கோடி கூட வசூல் பண்ணாத இட்லி கடை!… ஐயோ பாவம்!…
Dhanush: தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் இட்லி கடை படத்தை ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கியிருந்தார். சிறுவனாக இருக்கும்போது தனது சொந்த ஊரான தேனியில் வசித்தபோது அங்கிருந்த இட்லி கடை நினைவுகளை வைத்து ஒரு கதையை உருவாக்கியிருந்தார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் ‘சிறு வயதில் எங்கள் ஊரில் இருந்த இட்லி கடையில் இட்லி சாப்பிட ஆசைப்படுவேன். ஆனால், கையில் பணம் இருக்காது. எனவே, நானும், என் சகோதரிகளும் வயலில் பூ பறிக்கும் வேலையை செய்து அந்த காசில் இட்லி வாங்கி சாப்பிடுவோம்’ என சொல்லியிருந்தார். இது ட்ரோலிலும் சிக்கியது.
இப்படத்திற்காக மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்தார். அதில் பல செண்டிமெண்ட் காட்சிகளும் அரங்கேறியது. ஆனால், அதுவெல்லாம் வசூலில் எதிரொலிக்கவில்லை. இத்தனைக்கும் படம் வெளியான பின் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது.
கிராமத்து வாழ்க்கை, எளிமையான, அமைதியான வாழ்க்கை, அப்பா செய்த தொழிலை செய்வது, அப்பாவுக்காக தன்னுடைய ஆசைகளை தியாகம் செய்வது என பல விஷயங்களை இந்த படத்தில் தனுஷ் பேசியிருந்தார். படம் நன்றாக இருக்கிறது. இப்போதுள்ள இளைஞர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் என பலரும் பராட்டினார்கள்.
ஆனால், வசூல் ஏனோ மந்தமாக இருந்தது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை சொல்லும் sacnilk இணையதளத்தின் படி படம் வெளியான முதல் நாள் 11 கோடி, 2வது நாளில் 9.75 கோடி, 3வது நாளில் 5.6 கோடி, 4வது நாளில் 6.25 கோடி, 5வது நாளில் 6 கோடி, 6வது நாளில் 1.55 கோடி, 7ம் நாளான நேற்று 1.50 கோடி என படம் வெளியான 7 நாட்களில் 41.65 கோடியை மட்டுமே படம் வசூல் செய்திருக்கிறது.
அதாவது படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இட்லி கடை 50 கோடியை வசூல் செய்யவில்லை. அதேநேரம், இந்த படம் வெளியாகி அடுத்த நாள் வெளியான காந்தாரா 2 படம் இதுவரை 400 கோடி வசூலை தாண்டியிருக்கிறது.