
latest news
TVK Vijay: கரூருக்கு செல்லும் விஜய்!.. போலீஸ் விதித்த கட்டுப்பாடுகள்!…
Vijay: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூருக்கு மக்களை சந்திக்க சென்றிருந்தபோது அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி 41 பேர் வரை உயிரிழந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை சென்று விட்டார்.
இதுவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டார் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தன. ஆனால் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கின. இதை திட்டமிட்ட சதி, போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றெல்லாம் பேசினார்கள்.
ஒருபக்கம் நீதிமன்றம் விஜயையும், தவெக நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழக அரசு இரண்டு விசாரணை குழுவை அமைத்திருக்கிறது. ஆனால், இதை ரத்து செய்துவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தவெக சார்பில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.
மற்ற எல்லா விமர்சனங்களையும் விட விஜய் இப்போது வரை கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் கடுமையாக வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விஜய் பாதிக்கப்பட்ட சிலரிடம் வீடியோ காலில் பேசியிருக்கிறார். ஒரு பக்கம் விஜய் கரூருக்கு நேரில் செல்ல போலீசாரிடம் அனுமதியும் கேட்கப்பட்டது. அனேகமாக விஜய் வருகிற 13ம் தேதி திங்கட்கிழமை கரூர் செல்ல திட்டமிட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.
எனவே போலீசார் அவருக்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து அங்கு விஜய் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதி உதவியும் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜய் வாகனம் செல்லும்போது அவரின் பின்னால் வர யாருக்கும் அனுமதி இல்லை. கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என யாருக்கும் அங்கே அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.