உலகத்தில் ஒரே ஒரு நடிகன். அது சிவாஜிதான்!.. எம்.ஜி.ஆரை அப்படி சொல்ல வைத்த திரைப்படம்.. பிளாஷ்பேக்!…
1950 முதல் 1975 வரை தமிழ் சினிமாவில் எம்ஜிஆரும், சிவாஜி கணேசனும் இருபெரும் திரை ஆளுமைகளாக வலம் வந்தார்கள். எம்ஜிஆர் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லும் ஜனரஞ்சக மற்றும் சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை உருவாக்கினார்.. சிவாஜியோ நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளை கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை உருவாக்கினார்..
தனிப்பட்ட வாழ்க்கையில் எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் இருந்தது ஒரு அண்ணன் – தம்பிக்கான உறவுதான்.. ஏனெனில், சிவாஜியை விட எம்ஜிஆர் வயதில் மூத்தவர். எனவே எம்ஜிஆரை சிவாஜி எப்போதும் அண்ணன் என்று அழைப்பார்.. எம்ஜிஆரும் சிவாஜியை ‘தம்பி கணேசா’ என பாசமாக அழைப்பார்.. சினிமாவில் தொழிற்போட்டி இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பும், மரியாதையும், அன்பும் இருந்தது. சிவாஜி கணேசன் ஒரு சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆர் பல பேட்டிகளில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.. பல மேடைகளிலும் பேசியிருக்கிறார்.. சிவாஜியின் பல படங்களில் அவரின் நடிப்பை வியந்து பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்த வகையில் ஒரு சம்பவத்தை பார்ப்போம்..
எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் மூன்றாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தருணம் அது.. சிகிச்சை முடிந்து சென்னை வந்திருந்தார்.. அப்போது தயாரிப்பாளர் கலைஞானம் சிவாஜியை வைத்து மிருதங்க சக்கரவர்த்தி என்கிற படத்தை தயாரித்திருந்தார்.. அந்த படத்தை எம்ஜிஆர் பார்க்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.. நடிகர் சங்கத்தில் எம்ஜிஆருக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.. எம்ஜிஆர், அவரின் மனைவி ஜானகி மற்றும் அதிமுக அமைச்சர்கள் ஆகியோர் மிருதங்க சக்கரவர்த்தி படத்தை பார்த்தார்கள்..

படத்தின் 15 நிமிட காட்சியில் எந்த வசனமும் இருக்காது.. சிவாஜி கணேசன் மிருதங்கம் மட்டுமே வாசிப்பார்.. கேமரா மட்டும் அங்கும் இங்கும் சுழலும்.. அந்த 15 நிமிடத்தில் தான் எப்படிப்பட்ட நடிகர் என்பதை சிவாஜி தனது உடல் மொழியிலும், முக பாவனைகளிலும் காட்டியிருப்பார்.. காட்சி முடியும்போது சிவாஜி அமர்ந்தபடியே வாயில் ரத்தம் வந்து இறந்திருப்பார்..
படம் முடிந்ததும் எல்லோரும் எழுந்து விட்டனர்.. ஆனால் எம்ஜிஆர் மட்டும் சுமார் 5 நிமிடங்கள் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.. கலைஞானம் அவரின் அருகில் சென்று விசாரிக்க எழுந்த எம்ஜிஆர் ‘கலைஞானம்!. நான் சொன்னதாக போய் சிவாஜியிடம் சொல்.. உலகத்தில் ஒரே ஒரு நடிகன்தான் உண்டு.. அது சிவாஜி கணேசன் என்று சொல்’ என்று சொல்லிவிட்டு போனாராம்..
