
ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் சராசரி சினிமா ரசிகர்களை தர்பார் திரைப்படம் பெரிதாக கவரவில்லை என்பது சமூகவலைத்தளங்களில் தெரிகிறது. காரணம், முருகதாஸ் – ரஜினி கூட்டணி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு திரையில் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதே நிஜம்.
வழக்கமாக முருகதாஸ் திரைப்படங்களில் இருக்கும் வலுவான கதை மற்றும் திரைக்கதை தர்பார் திரைப்படத்தில் இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணம். ஹீரோ ரஜினி என்பதால் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, தனது ஸ்டலையும் விட்டுவிட்டு, முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தவவே அனைத்து காட்சிகளையும் அமைத்துள்ளார். படத்தில் எந்த லாஜிக்கும் இல்லை.

முதலில் படத்தின் கதை முழுக்க முழுக்க மும்பையில் நடக்கிறது என்பது நமக்கு ஒட்டவே இல்லை. காரனம், தமிழ் ரசிகர்களுக்கு அது பரிச்சயப்படாத களம். அதோடு, ரஜினி, நயன்தாரா, யோகிபாபு தவிர மற்ற அனைவரும் பாலிவுட் நடிகர்கள். இது படத்தின் அடுத்த முக்கிய மைனஸ்.. துப்பாக்கி படத்தின் கதை களம் மும்பைதான். ஆனால், காட்சிகளின் சுவாரஸ்யமும், திரைக்கதையும் நம்மை கட்டிப்போட்டது. கதையோடு ஒன்ற வைத்தது. அந்த மேஜிக் தர்பாரில் மிஸ்ஸிங்.
அடுத்து படத்தில் எந்த இடத்திலும் லாஜிக் இல்லை. திரையில் இருப்பது ரஜினி என்பதால் என்ன காட்டினாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முருகதாஸ் நினைத்து விட்டார் போலும். ரஜினி மும்பை கமிஷனர் என்கிறார். ஆனால், எல்லா இடத்திற்கும் தனியாளாகவே போய் சண்டை போடுகிறார். சுட்டுத்தள்ளிக்கொண்டே இருக்கிறார். அவரை யாரும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்க வந்த மனித உரிமை கமிஷன் அதிகாரியையும் மிரட்டி கையெழுத்து வாங்குகிறார். என்னை வேறு ஊருக்கு மாற்றினால் நான் கூறாமல் யாரும் என் பதவிக்கு வரமாட்டார்கள்.. போலீஸ் அனைவரும் ஸ்டிரைக் செய்வார்கள் என்கிறார். வில்லனுக்கு பயந்து போலீஸ் அனைவரும் பயந்து வீட்டிலேயே இருக்கிறார்கள்.
இதுவெல்லாம் எந்த நாட்டில் நடக்குமோ? முருகதாஸ்தான் பதில் சொல்ல வேண்டும்.
கமிஷனரான ரஜினி நயன்தாராவை பார்த்து ஜொள்ளு விடுகிறார். அவரிடம் பேச முடியாமல் வாய் குழறுகிறார். உறவுக்கார குழந்தையின் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டுபிடிக்க நயன் ரஜினியை அழைக்கிறார். (ஸ்ஸ்ஸ் முடியல). அதன்பின் ஸ்ரீமன் கூறியதும் வயது வித்தியாசம் புரிந்து ரஜினிக்கு திடீரென ஞானோதயம் வருகிறது. அந்த காட்சி படத்தின் கதையோட்டத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை.

ரஜினி படம் என்றாலே ரஜினியின் குறும்பு, ரொமான்ஸ், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள், செண்டிமெண்ட் அனைத்தும் இருக்க வேண்டும் என்கிற 80களின் ஃபார்மூலாவை தர்பாரில் முருகதாஸ் கையாண்டுள்ளார். சமீபத்தில்தான் கபாலி, காலா ஆகிய படங்கள் மூலம் ரஜினி தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை செய்ய துவங்கினார். முருகதாஸ் மீண்டும் பழைய ரூட்டுக்கு ரஜினியை அழைத்து சென்று நமது பொறுமையையும் சோதித்துள்ளார்.
கதை, திரைக்கதை, லாஜிக்கை அடுத்து வில்லன். முருகதாஸ் படங்களில் வலுவாக அமைக்கப்படும் வில்லன் கதாபாத்திரம் தர்பாரில் படு சொதப்பலாக உள்ளது. இடைவேளைக்கு பிறகே சுனில் ஷெட்டி வருகிறார். ரஜினியுடன் மோத லோக்கல் ரவுடிகளை அனுப்புகிறார். டெம்போ விட்டு அவர் வரும் காரின் மீது மோதுகிறார். அவரைத் தேடி ரஜினி தூக்கமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்க, செல்போனில் அழைத்து நான் இங்கே இருக்கிறேன் வா? என அழைக்கிறார். வழக்கம் போல் ரஜினியிடம் அடி வாங்கி இறந்து போகிறார். இப்படி வீக்கான வில்லன் படத்தின் பெரிய மைன்ஸ்..
இப்படி அனைத்து விஷயங்களிலும் முருகதாஸ் கோட்டை விட்டிருப்பதால்தான் தர்பார் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.