
சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த விவாதங்கள் மேலும் வலுப்பெறும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித்தை ‘திரெளபதி’ திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் சந்தித்ததாகவும் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் ‘திரெளபதி’ படத்திற்காக அஜீத் வாழ்த்து தெரிவித்ததாகவும் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன.
ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு அஜீத் வாழ்த்து கூறலாமா? என்று ஒரு சிலர் வரிந்து கட்டிக் கொண்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சந்திப்பு உண்மையில் நடந்ததா? என்பது குறித்து இயக்குனர் ஜி.மோகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
வதந்திகளை நம்பாதீர்.. திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே’ இவ்வாறு இயக்குனர் கூறியதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது