Cinema History
சத்யம் தியேட்டர் குறித்து நறுக் வசனம் எழுதிய வசனகர்த்தா- வியட்நாம் வீடு சுந்தரம்
1943ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா என பன்முக கலைஞராக அறியப்பட்ட வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள்.
முதன் முதலில் சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு என்ற படத்தில் வசனம் எழுதினார் அந்த படத்தின் வசனங்கள் வலுவாக இருந்ததால் யார் இந்த வசனகர்த்தா என மக்கள் தேடிப்பார்க்க துவங்கினர். இந்த படத்தில் பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற கேரக்டரில் சிவாஜி வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த கதாபாத்திரத்தை வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் வலுவாக்கியது என சொல்லலாம். அதனால் முதல் படத்தின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டு வியட்நாம் வீடு சுந்தரம் ஆனார் இவர்.
இவரது வசனங்கள் மற்ற நடிகர்களுக்கு பொருந்துவதை விட அதிகம் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குத்தான் பொருந்திப்போனது.
வியட்நாம் வீடு, ஞான ஒளி உள்ளிட்ட படங்களில் இவரது வசனங்கள் பெரிதும் புகழ்பெற்றது ஞான ஒளி படத்தில் இடம்பெற்ற ஒரு மந்தையில் இரண்டிரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன, இரண்டும் சந்தித்தபோது பேசமுடியவில்லையே என்ற இவரது வசனங்கள் எல்லாம் வேற லெவல் வசனங்கள்.
சிவாஜி நடித்த கெளரவம் படத்துக்கு வசனம் எழுதி அந்த படத்தை இயக்கியவர் இவர். அந்த படத்தில் ரஜினிகாந்த் என்ற வேடத்தில் வக்கீலாக சிவாஜி நடித்திருந்தார் அந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் புகழ்பெற்றது.
யாருமே பொதுவாக ஜாலியாக யாரையும் கேலி செய்யும்போது பெரிய கெளரவம் சிவாஜி என்று கேலி செய்வார்கள். அந்த அளவு கெளரவம் படம் வியட்நாம் வீடு சுந்தரத்துக்கு ஒரு கெளரவமான இடத்தை பெற்றுக்கொடுத்தது.
எம்.ஜி.ஆர் நடித்த நாளை நமதே படத்துக்கு இவரது வசனம்தான். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் இவர் பணியாற்றவில்லை சிவாஜியுடனே அதிகம் பணிபுரிந்துள்ளார்.
1991ம் ஆண்டு சிவாஜி , மனோரமா ஜோடியாக நடித்த ஞானப்பறவை என்ற படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாகும்.
இந்த படத்தில் நடிகர் சிவாஜிகணேசன் ஒருவரின் கண்களை பார்த்தே அவரை முடிவு செய்து விடுவார் அவரது எதிர்காலத்தை சொல்லும் வித்தியாசமான படம் இது. இந்த படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கி இருந்தார் . இந்த படம் பெரிய அளவில் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் ரகுநாத் இயக்கி கார்த்திக் மற்றும் சிவாஜிகணேசன் நடித்த ராஜ மரியாதை என்ற படம் அருமையான கதையம்சம் கொண்ட படமாகும் இந்த படத்திற்கு வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுதி இருந்தார்.
முருகனின் திருவிளையாடல்களை நினைவு கூறும் விதமாக வியட்நாம் வீடு சுந்தரம் கந்தர் அலங்காரம் என்ற பகதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தேவர் தயாரித்த தெய்வம் படத்தில் வருவது போல முருகனை பற்றி ஒவ்வொரு கதையாக வரும். வெற்றிகரமாக ஓடிய பக்திப்படமிது.
வியட்நாம் வீடு சுந்தரம் 80களின் இறுதியில் வந்த ஆனந்த், ஜல்லிக்கட்டு, சூரசம்ஹாரம் உள்ளிட்ட படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார் அதில் இவர் வசனம் எழுதிய ஜல்லிக்கட்டு படத்தின் வசனங்கள் மிக புகழ்பெற்றது உன் எதிரிதான் என்னுடைய எதிரியும் என சத்யராஜை பார்த்து சிவாஜி பேசும் வசனங்கள் புல்லரிக்க வைக்கும் என்று சொல்லலாம். பஞ்சபாண்டவர்கள் 5 பேர் இருக்கும்போது அர்ஜீனனை மட்டும் ஏண்டா கண்ணன் சூஸ் பண்ணான் அர்ஜூனன் கிட்ட வீரம் இருந்தது கண்ணன்கிட்ட விவேகம் இருந்தது. உன்னுடைய வீரமும் என்னுடைய விவேகமும் சேர்ந்தா குருசேத்திரம்.குருஷேத்திரத்தை என்னடா நெனச்ச யாரை எங்க எப்போ முடிக்கணும்னு இப்போ உனக்கு நான் குருஷேத்திரம் சொல்லித்தர போறேன் என சத்யராஜிடம் சிவாஜி பேசும் வசனங்கள் பார்க்கும் ரசிகர்களை சிலிர்க்கவைத்தது. வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனமும் சிவாஜி சத்யராஜின் நடிப்பும் அபாரமாக இருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு வசனம் வில்லன் கோஷ்டியினர் சிவாஜியை பார்த்து பேசுவார்கள், சத்தியம் , தர்மம்னு பேசி பேசி வீணாப்போயிட்டிங்களே ராம்பிரகாஷ், சத்தியம் மவுண்ட்ரோடுல தியேட்டர் ஆயிடுச்சு, தர்மம் அங்க படமா ஓடிக்கிட்ருக்கு என நறுக்கு தெறித்தாற் போல வசனங்களை எழுதியவர்.
அந்த படத்தின் 100வது நாள் விழாவில் வியட்நாம் வீடு சுந்தரம் எம்.ஜி.ஆர் கையால் சிறந்த வசனத்திற்காக விருது பெற்றார்.
மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி,ஆர் அவர்கள், சிவாஜி சத்யராஜ் நடிப்பு ,மணிவண்ணன் இயக்கம் இளையராஜா இசை, வியட்நாம் வீடு சுந்தரத்தின் நறுக்கு தெறித்த வசனங்களால் இப்படத்தை இரண்டு முறைக்கும் மேல் பார்த்தாராம்.
வியட்நாம் வீடு சுந்தரம் இறுதிக்காலங்களில் டிவி நாடகங்களில் நடிக்க துவங்கினார்.சில சீரியல்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். அப்பு, ஆஞ்சநேயா, கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாவான வியட்நாம் வீடு சுந்தரம் கடந்த 2016ம் ஆண்டு மரணம் அடைந்தார்.