Cinema News
சாதியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்… ருத்ர தாண்டவம் இயக்குனரை தாக்கிய பேரரசு?
விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கியவர் தான் பிரபல இயக்குனர் பேரரசு. இந்நிலையில் சமீபத்தில் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசியுள்ள பேரரசு ருத்ர தாண்டவம், திரெளபதி போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் மோகனை மறைமுகமாக சாடியுள்ளார்.
இயக்குனர் ராஜராஜ துரை இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் முதல் மனிதன். ஆடுகளம் நரேன், மாரிமுத்து, கெளசல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை உசேன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய இயக்குனர் பேரரசு, “சாதி கலவரத்தைத் தூண்டும் படங்கள் வரும் சமயத்தில் சாதியே இல்லை என முதல் மனிதன் படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதியை வைத்து இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சாதியை உயர்த்தி இன்னொரு சாதியைத் தாழ்த்தி எடுக்கும் சினிமாவை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரி படத்தைத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கக் கூடாது.
சினிமாவில் யார் சாதியைப் பார்த்துப் பழகுகிறார்கள். அனைவருமே நண்பர்களாக இருக்கிறார்கள். எனவே சினிமாவில் சாதியும் இல்லை, மதமும் இல்லை. சினிமாவில் சாதியை வளர்ப்பவர்களை அழித்துவிட வேண்டும். அனைவருக்கும் பொதுவானது தான் சினிமா.
இந்துவாகப் பிறந்ததால் நான் இந்துவாக இருக்கிறேன். என் அப்பா காட்டிய தெய்வத்தை வழிபடுகிறேன் இதில் என் தவறு எங்கு இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த முதல் மனிதன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி” என கூறியுள்ளார்.
சாதியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என இயக்குனர் பேரரசு மறலமுகமாக இயக்குனர் மோகனை குறிப்பிடுவது போல தெரிகிறது. காரணம் சமீபத்தில் மோகன் இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் மற்றும் திரெளபதி உள்ளிட்ட படங்கள் சாதியை மையப்படுத்தியே வந்தன. எனவே அவரை தான் மறைமுகமாக சாடுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.