
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’அதிசயம் அற்புதம்’ என்ற இரண்டே இரண்டு வார்த்தை பேசியதற்கே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பதில் தந்தார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடம் பேசினார். அதில் திமுக குறித்து அவர் கூறிய ஒரு சில கருத்துக்களுக்கு திமுகவினர் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்
‘முரசொலி வைத்திருந்தால் திமுககாரன், ‘துக்ளக்’ வைத்திருந்தால் அறிவாளி என்று ரஜினிகாந்த் பேசியது திமுகவினர் பெரும் அதிர்ச்சி அடையச் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக துக்ளக் மீது கடுப்பில் இருக்கும் திமுக, தற்போது முரசொலியையும், துக்ளக்கையும் சம்பந்தப்படுத்தி ரஜினி பேசியது திமுகவினர் பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது
அந்த வகையில் ரஜினியின் இந்த பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
ரஜினியை ஏற்கனவே ’வயதான பெரியவர்’ என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ள நிலையில் தற்போது ’கால் நூற்றாண்டாக கால் பிடித்த காரியக்காரர்’ என்று கூறியிருப்பது ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளது. அவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது