
1971ம் ஆண்டு பெரியார் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற விழா நிகழ்வுகள் குறித்து துக்ளக் விழாவில் ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரமே பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒருபக்கம் ரஜினியின் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. மறுபக்கம் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் நடவடிக்கை அவகாசம் கொடுங்கள். அதற்கு முன் ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் எனக் கூறி நீதிபதி கேள்வி எழுப்பினார். எனவே, திராவிடர் கழகம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி ‘ரஜினி மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒருவார அவகாசம் அளித்தே மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு புகார்கள் மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம். பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினியின் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் வரை சட்டப் போராட்டம் தொடரும்’ என அறிவித்துள்ளார்.
ஆனால், இது ரஜினிக்கு கிடைத்த வெற்றி என அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.