ஜோசஃப் விஜய் இளைய தளபதி ஆனது இப்படித்தான்… ரசிகர்கள் கொண்டாடும் தளபதியின் சுவாரஸ்ய பின்னணி…
ரசிகர்களின் மனதில் தளபதியாக வாழ்ந்து வரும் விஜய், தனது சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு உயர்ந்து வந்தவர். “இதெல்லாம் ஒரு முகமா?” என எழுதிய பத்திரிக்கைகள் எல்லாம் பிற்காலத்தில் விஜய்யை புகழ்ந்து எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த அளவுக்கு தனது உழைப்பால் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் விஜய்.
சினிமா ஆசை
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே விஜய்க்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. 10 ஆம் வகுப்பு முடித்த பிறகு சினிமாவில் ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூறினார் விஜய். ஆனால் எஸ்.ஏ.சியோ விஜய்யிடம் கல்லூரி படிப்பு முடித்தப் பிறகுதான் சினிமா என கண்டிப்போடு கூறிவிட்டார்.
“என்னை ஹீரோவா ஆக்குங்க”
விஜய் சென்னை லயோலா கல்லூரியில் விஸுவல் கம்யூனிகேஷன் துறையை தேர்ந்தெடுத்து படித்தார். ஆனால் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே சினிமாவில் கதாநாயகன் ஆகவேண்டும் என துடித்துக்கொண்டே இருந்தாராம்.
தனது தந்தை எஸ்.ஏ.சியிடம் “என்னை எப்போ ஹீரோவா வைத்து படம் எடுக்கப்போறீங்க?” என விஜய் கேட்டுக்கொண்டே இருப்பாராம். ஆனால் எஸ்.ஏ.சிக்கோ விஜய்யை ஹீரோ ஆக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். எப்படியாவது விஜய்யை ஒரு அரசு அதிகாரியாக ஆக்கிவிடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்ததாம்.
முதல் படம்
இந்த நிலையில்தான் எஸ்.ஏ.சி. விஜய்யை ஹீரோவாக வைத்து “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தை தயாரித்தாராம். ஆனால் அத்திரைப்படம் படுதோல்வியடைந்ததால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டாராம் எஸ்.ஏ.சி.
இலவசமாக நடித்துக்கொடுத்த விஜயகாந்த்
எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படம் விஜயகாந்த்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது. ஆதலால் விஜயகாந்த்திற்கு எஸ்.ஏ.சியின் மீது ஒரு தனித்த மரியாதை உண்டு.
விஜய் ஹீரோவாக நடித்த “நாளைய தீர்ப்பு” திரைப்படம் சரியாக ஓடாத காரணத்தால், விஜய்யை மக்களின் மனதில் பதியவைக்க வேண்டும் என எஸ்.ஏ.சி நினைத்தார். அதன் படி “விஜயகாந்த்தை தொடர்பு கொண்டு எனது மகனை வைத்து ஒரு திரைப்படம் இயக்கப்போகிறேன். அதில் நீங்கள் நடிக்க முடியுமா?” என கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: “இவனுக்கு நடிப்பே வராது, அந்த நடிகரை கூப்பிட்டு வாங்க”… ரஜினியை கண்டபடி திட்டிய பாலச்சந்தர்…
எஸ்.ஏ.சி இவ்வாறு கேட்ட 10 ஆவது நிமிடத்தில் விஜயகாந்த் எஸ்.ஏ.சியின் வீட்டில் இருந்தார். “எப்போது ஷூட்டிங் என கூறுங்கள். வந்துவிடுகிறேன்” என கூறினாராம். சம்பளம் குறித்து கேட்டபோது விஜயகாந்த் “பணம் எல்லாம் வேண்டாம். நீங்க கேட்டுட்டீங்க அதனால பண்ணித்தரேன்” என கூறினாராம். இதனை தொடர்ந்துதான் “செந்தூரப்பாண்டி” திரைப்படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இளைய தளபதி
“செந்தூரப்பாண்டி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அத்திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் விஜய்யை பாராட்டி இளைய தளபதி என்று பட்டம் கொடுத்தாராம். இதனை தொடர்ந்து தனது மூன்றாவது திரைப்படமான “ரசிகன்” திரைப்படத்தில் “இளைய தளபதி” விஜய் என டைட்டில் போடப்பட்டது. இப்போது தமிழ் ரசிகர்களின் மனதில் “தளபதி” ஆக குடிகொண்டு இருக்கிறார் விஜய்.