ரஜினியின் மனதுக்குள் சினிமா ஆசையை விதைத்த தோழி!.. இதுவரை வெளிவராத தகவல்!..

நடிகர் ரஜினி சினிமாவுக்கு வர உதவியது அவரின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ரஜினியும், அவரும் பெங்களூரில் ஒன்றாக பேருந்தில் வேலை செய்தவர்கள். ராஜ் பகதூர் ஓட்டுனராகவும், ரஜினி நடத்துனராகவும் ஒரே பேருந்தில் வேலை செய்தவர்கள்.
ரஜினி நாடகம் ஒன்றில் நடித்ததை பார்த்து ‘நீ சிறப்பாக நடிக்கிறாய். உன்கிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு’ என சொன்னவர்தான் இந்த பகதூர். அதேபோல், ரஜினி சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் படித்தபோது அவருக்கு ஒவ்வொரு மாதமும் 120 ரூபாயை ரஜினிக்கு அனுப்பியவர் இவர்.
ராஜ் பகதூர் அனுப்பிய 120 ரூபாய் இல்லையென்றால் நான் இரண்டு வருடம் சென்னையில் நடிப்பு கல்லூரியில் படித்திருக்கவே முடியாது என ஒரு பேட்டியில் ரஜினியே கூறியிருந்தார். ராஜ்பகதூர் வாங்கிய சம்பளம் ஆயிரமோ, இரண்டாயிரமோ அல்ல. அவர் பெற்றது 320 ரூபாய் சம்பளம். அதில் 200ஐ வைத்துகொண்டு 120 ரூபாயை ரஜினிக்கு ஒவ்வொரு மாதமும் 2 வருடங்கள் அனுப்பியிருக்கிறார்.
அதனால்தான், எப்போது பெங்களூர் சென்றாலும் ரஜினி போய் சந்திக்கும் நபராகவும், நண்பனாகவும் ராஜ்பகதூர் இருக்கிறார். ரஜினி பலமுறை அவரை ‘ நீ சென்னக்கு வந்துவிடு. உனக்கு தேவையானதை நான் செய்து தருகிறேன்’ என சொல்லியும் அவர் அதை ஏற்கவில்லை. ரஜினிக்கு உதவியது ராஜ் பகதூர் எனில் ரஜினியின் மனதில் சினிமா ஆசையை விதைத்தது அவரின் தோழிதான்.
ரஜினி பெங்களூரில் வேலை செய்யும் போது அவருக்கு பிரபாவதி என்கிற தோழி இருந்தார். ரஜினியின் சுறுசுறுப்பு, ஸ்டைல் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ‘உன்னுடைய சுறுசுறுப்புக்கும் தோற்றத்துக்கும் நீ சினிமாவுக்கு போனா பெரிய நடிகனாக வருவாய்’ என சொன்னதோடு மட்டுமில்லாமல், சென்னையில் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்த விளம்பரம் வந்த செய்தி பத்திரிக்கையை அவரிடம் காட்டியது அவர்தான்.
அதன்பின்னர்தான், வேலைக்கு விடுமுறை எடுத்துவிட்டு இந்த கல்லூரிக்கு சென்று சேர முயற்சி செய்ய வேண்டும் என ரஜினி முடிவெடுத்தார். ஆனால், அவரின் குடும்பத்தினர்களும், நண்பர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த விஷயத்தை ரஜினி சொன்னதும் அப்போதே அவர் நடிகராகி விட்டதுபோல சந்தோஷப்பட்ட நண்பர்தான் ராஜ் பகதூர். அவர்தான் ரஜினிக்கு நம்பிக்கை கொடுத்து சென்னை அனுப்பி வைத்தார்.