படத்தில் நடிக்க மறுத்த நடிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி... என்ன காரணம் தெரியுமா?
பொதுவாக ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழியில் ரீமேக் செய்யப்படும் படங்கள் ஒரிஜினல் படங்கள் அளவுக்கு வரவேற்பை பெறுவதில்லை. ரீமேக்காக இருந்தாலும் சில இடங்களில் ஏதாவது சொதப்பல் நிச்சயம் இருக்கும்.
ஆனால் சில படங்கள் இதில் இருந்து மாறுபட்டவை. ஒரிஜினலை விட ரீமேக் சிறப்பாக உள்ளது என கூறும் அளவிற்கு ரீமேக் தரமாக இருக்கும். தற்போது அப்படித்தான் நெஞ்சுக்கு நீதி படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆர்டிகள் 15 என்ற படத்தை தான் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக உதயநிதி ஸ்டாலினும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி அர்ஜூனும் நடித்துள்ளனர்.
ஒரிஜினலை விட நெஞ்சுக்கு நீதி படம் சிறப்பாக இருப்பதாகவும், நடிகர்கள் தேர்வு நன்றாக இருப்பதாகவும் பலர் பாராட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக படத்தில் நெகடிவ் ஷேடில் வரும் ஒரு ஹீரோ கேரக்டரில் நடித்துள்ள ஆரியின் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆரி, "இந்த கதையை பல முக்கிய ஹீரோக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி" என கூறியுள்ளார். முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க நடிகர்கள் அதர்வா மற்றும் அருள்நிதியிடம் பேச்சு வார்த்தை நடந்தது. அவர்கள் மறுத்த பின்னரே ஆரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.