ஒரே ஒரு ஷங்கர் படம்தான்… மொத்த தயாரிப்பு நிறுவனமும் குளோஸ்… அடக்கொடுமையே!
“எந்திரன்”, “2.0” ஆகிய படைப்புகளின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். ஆனால் ‘யானைக்கும் அடி சருக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அவர் இயக்கிய சில திரைப்படங்கள் சருக்கியதும் உண்டு. அப்படி ஒரு முறை சருக்கியதில் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கே பெரிய அடி விழுந்திருக்கிறது. அது எந்த திரைப்படம்? யார் அந்த தயாரிப்பாளர்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வந்த ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம், "காதலுக்கு மரியாதை", “வானத்தைப் போல”, “அந்நியன்”, “தசாவதாரம்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளது. ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தாரின் பெயர் வி.ரவிச்சந்திரன். இவர் பல ஜாக்கிச்சான் திரைப்படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார். கோலிவுட்டில் மிகவும் செல்வாக்குள்ள தயாரிப்பாளராக ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஷங்கர், விக்ரமை வைத்து “ஐ” என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இத்திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.
“ஐ” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அத்திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆதலால் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
“ஐ” திரைப்படத்திற்குப் பிறகு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம், “பூலோகம்”, “விஸ்வரூபம் 2” போன்ற திரைப்படங்களை தயாரித்தது. எனினும் அவர்களால் தொடர்ந்து திரைப்படங்களை எடுக்கமுடியவில்லையாம். இவ்வாறு ஒரு வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனத்திற்கு பேரிடியாய் வந்து விழுந்திருக்கிறது “ஐ” திரைப்படம்.
இதையும் படிங்க: தமிழில் இருந்து ஹாலிவுட்டுக்குப் போன டாப் நடிகர்கள்… லிஸ்ட்டை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!!