Cinema History
இது என்னோட படமே இல்ல!… சூப்பர் ஹிட் படத்தை பற்றி எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!..
1966ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான அதி அற்புதமான படம் அன்பே வா. புரட்சித்தலைவர் எம்ஜிஆரை மிக மிக வித்தியாசமாகக் காட்டிய படம். படத்தில் எந்த ஒரு அறிவுரை கிடையாது. பஞ்ச் டயலாக் கிடையாது. ஏழைகளுக்காகக் குரல் கொடுப்பதில்லை. வில்லனை எதிர்த்துப் போராடி நீதியை நிலைநாட்டும் சீன்கள் இல்லை.
இது வழக்கமான பார்முலாவை உடைத்தெறிந்து எம்ஜிஆருக்குப் புரட்சிகரமாக வெளியான படம். கம் செப்டம்பர் என்ற அமெரிக்கப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் அன்பே வா. ஏவிஎம்மின் மாபெரும் வெற்றிப் படைப்பு இது. ஈஸ்ட்மேன் கலரில் வெளியானது. இந்தப் படத்தைப் பற்றிய சில குறிப்புகளை இயக்குனர் திருலோகசந்தர் இப்படி சொல்கிறார்.
கதையை முதன் முதலில் எம்ஜிஆரிடம் நான் கூறிய போது அவரின் முகத்தில் கடைசி வரை புன்னகை இருந்து கொண்டே இருந்தது. கதையைக் கூறி முடித்தேன். அடுத்த வினாடியே எம்ஜிஆர், கண்டிப்பாக இந்தக் கதையின் நான் நடிக்கிறேன். இது முழுக்க முழுக்க உங்களுடைய படம். இந்தப் படம் அடையப் போகும் வெற்றிக்கு முழு சொந்தக்காரர் நீங்கள் தான் என்றார்.
படமும் நினைத்தபடியே நல்லபடியாக எடுக்கப்பட்டது. ரிலீஸானது. மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றி விழாவில் என்னிடம் சொன்னபடியே இந்தப் படத்தோட முழு வெற்றிக்கும் சொந்தக்காரர் இயக்குனர் தான் என்று மறக்காமல் சொன்னார் எம்ஜிஆர்.
அன்பே வா படத்தில் எம்ஜிஆருக்கும், சரோஜா தேவிக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கும். படத்தின் இசையை எம்.எஸ்.விஸ்வநாதன் கவனித்துக் கொண்டார். பாடல்களை வாலி எழுதினார். புதிய வானம், லவ் பேர்டஸ், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.
இந்தப் படத்தை எடுத்த போது எம்ஜிஆருக்கு வயது 48. ஜேபி. என்ற கேரக்டரில் வெகு அருமையாக நடித்திருந்தார். தான் ஒரு பெரிய பணக்காரன் என்பதை மறைத்து நாயகியுடன் மோதலுக்குப் பின் காதல் கொள்வதும், இடையில் அது தெரிய வரும்போது சிக்கல் வந்து கடைசியில் சுபமாவதும் ரசிக்கும் வகையில் காட்சிகள் சிறிதும் போரடிக்காதவாறு எடுக்கப்பட்டு இருக்கும்.