ட்ரெயினிங் போனப்பையே செம அடி..- விடுதலைக்கு முன்னாடியே சம்பவம் ஆரம்பிச்சிடுச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த சூரி..!
சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம் விடுதலை. விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சூரிக்கு கதாநாயகனாக இதுதான் முதல் படம் என்பதால் சூரியும் கூட படம் குறித்து மிகுந்த ஆவலோடு இருந்து வருகிறார்.
இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சூரிக்கு நிறைய அடிகள் விழுந்தன என கூறப்படுகிறது. படத்தில் எந்த காட்சியையும் டூப் போடாமல் சூரியே நடித்துள்ளார். முழுக்க முழுக்க படத்தை காட்டிற்குள்ளேயே வைத்து படமாக்கியுள்ளனர்.
இதுக்குறித்து சூரி கூறும்போது “படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்கள் முன்புதான் என்னிடம் வெற்றிமாறன் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் குறித்து கூறினார். சூரி உங்களுக்கு இதுதான் முதல்படம். ஆனால் முதல் படத்திலேயே ஆக்ஷன் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். எனவே அதற்காக பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
ட்ரெயினிங்கில் நடந்த சம்பவம்:
படப்பிடிப்பிற்கு நான்கு நாட்கள் மட்டுமே இருந்ததால் நானும் ஃபைட் மாஸ்டரை பார்த்து சண்டை முறைகள் எல்லாம் பயிற்சி எடுத்தேன். பயிற்சி எடுக்கும்போதே அடிப்பட்டு ஒரு கையின் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அதற்கு பிறகு படப்பிடிப்புக்கு போய் கிட்டத்தட்ட பல முறை அதே இடத்தில் மீண்டும் மீண்டும் அடிப்பட்டது” என கூறியுள்ளார் சூரி.
படப்பிடிப்புக்கு பிறகு அந்த கையில் ஏற்பட்ட பாதிப்பால் சூரியால் உடல் பயிற்சிகள் செய்ய முடியாமல் போய்விட்டது. படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் உடலை மறுபடியும் சரி செய்து வருகிறார் சூரி.