More
Categories: Cinema History Cinema News latest news

அப்பாவிடம் நடிகர் அப்புக்குட்டி போட்ட சபதம்… என்ன நடந்துச்சு?

காமெடி நடிகர் அப்புக்குட்டி, திருச்செந்தூர் பக்கம் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னை வந்து ஒரு ஹோட்டலில் கிளீனராக வேலை பார்த்து வந்த அவர், ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு சினிமா வாய்ப்புத் தேடியிருக்கிறார். ஒரு சமயத்தில் நீயெல்லாம் உருப்படமாட்ட ஊருக்கே போய் சேர் என்று சொன்ன தந்தையிடம் ஒரு சபதம் போட்டிருக்கிறார். என்ன சபதம் அது… அதில் ஜெயித்தாரா?

திருச்செந்தூரை அடுத்த நாதன்கிணறுதான் அப்புக்குட்டிக்கு சொந்த ஊர். அவரது தந்தை சென்னையில் காய்கறி வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். சொந்த ஊரில் எட்டாவது வரை படித்த அப்புக்குட்டிக்கும் படிப்புக்கும் ஏணி வைச்சாலும் எட்டாதாம். இதனால் அவரது அப்பா சென்னைக்கு வந்துடு.. எதுனா வேலை செஞ்சு பொழச்சுக்கலாம் என்று அழைத்திருக்கிறார். இதையடுத்து சென்னை வந்த அப்புக்குட்டி, வடபழனியில் இருந்த ஹோட்டல் ஒன்றில் கிளீனராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

Advertising
Advertising

அப்புக்குட்டி

அங்கு உணவோடு 450 ரூபாய் ஊதியம் கொடுத்திருக்கிறார்கள். நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒருநாள் சாப்பிட வந்த ஒருவர் அப்புக்குட்டியை முறைத்தபடியே இருந்திருக்கிறார். சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வந்த அவர், அப்புக்குட்டியைப் பார்த்து, `சினிமாவில் நடிக்கிறாயா?’ என்று கேட்டிருக்கிறார். அதுவரை சினிமா வாய்ப்பு என்பதையே யோசிக்காத அப்புக்குட்டி, உடனே சரி என தலையாட்டியிருக்கிறார். வெளியில் வா பேசிக்கொள்வோம் என்று சொல்லியபடி வெளியே போயிருக்கிறார்.

கிளீனிங் வாளியை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு வெளியேபோய் பார்த்தபோது அந்த குறிப்பிட்ட நபரைக் காணவில்லையாம். இதுபற்றி தன்னுடன் வேலைபார்த்த குமரேசன் என்பவரிடம் அப்புக்குட்டி சொல்லியிருக்கிறார். ஏற்கனவே சினிமா கனவில் இருந்த அவர், வேலையை விட்டுவிட்டு சினிமா வாய்ப்புத் தேடுவோம் என்று சொல்லியிருக்கிறார். அதையடுத்து வேலையை விட்ட அப்புக்குட்டி கையில் இருந்த பணத்தில் நல்ல உடைகள் எடுத்ததோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: குபீர் சிரிப்பை வரவழைக்கும் சூரியின் சூப்பர்ஹிட் படங்கள்

பழைய சைக்கிள் ஒன்றில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றின் படிக்கட்டாய் ஏறி ஏறி இறங்கியிருக்கிறார். எல்லோரும் சொல்லி வைத்தாற்போல், போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு வாய்ப்பு இருக்கும்போது கூப்பிடுகிறோம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கையில் இருந்த காசு மொத்தமாகக் கரையவே, ஒருவேளை சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதைப்பார்த்த அப்புக்குட்டியின் அப்பா ரொம்பவே கலங்கிவிட்டாராம். `நீ சென்னையில பொழைச்ச லட்சணம் போதும்டா… பேசாம ஊருக்கே போயிடு’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது, `படத்துல நடிச்சாதான் நான் ஊருக்கே வருவேன். இல்லாட்டி என் கதை இங்கேயே முடியட்டும்’ என்று சபதம் போட்டிருக்கிறார்.

அப்புக்குட்டி

வடபழனி கமலா தியேட்டருக்குப் பின்புறம் இருந்த ஒரு டீக்கடைதான் இவருக்கும் இவர்களது நண்பர்களுக்கும் மீட்டிங் பாயிண்ட். அப்போது இயக்குநர் எழிலிடம் அசோசியேட்டாக இருந்த சுசீந்திரனும் அந்தக் கடைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தாராம். இவர் படும் கஷ்டங்களைப் பார்த்து அந்த டீக்கடைக்காரர் சுசீந்திரனிடம் இவருக்காக சிபாரிசு செய்திருக்கிறார்.

முதன்முதலில் மறுமலர்ச்சி படத்தில் ஒரு வசனம் பேசும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதன்பிறகு தீபாவளி படத்தில் சின்ன கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு படம் எடுப்பது தெரிந்து, அவரிடம் போய் நின்றிருக்கிறார். அந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர் கொடுத்தார். அப்புக்குட்டி என்கிற நடிகன் வெளியில் தெரிந்த முதல் படம் அதுதான்.

அதன்பிறகு, அழகர்சாமியின் குதிரை படத்தில் கனமான பாத்திரம் என படிப்படியாக முன்னேறினார். இசைஞானி இளையராஜாவின் சிபாரிசின் பேரில் ஸ்னேகவீடு படத்திலும் நல்ல கதாபாத்திரம் என கவனம் ஈர்க்கும் நடிகராக உருவெடுத்தார். இதன்மூலம் தந்தையிடம் விட்ட சவாலில் ஜெயித்தபிறகே சொந்த ஊருக்குப் போனாராம் நடிகர் அப்புக்குட்டி.

Published by
Akhilan

Recent Posts