விடிய விடிய பார்த்திபனை தூங்கவிடாமல் செய்த நடிகர்!.. ஒரு வசனத்துக்கு இவ்வளவு அக்கப்போரா?!..
திரையுலகில் புதிய பாதை திரைப்படம் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக மாறியவர் இவர். புதிய பாதை திரைப்படம் மூலம் தனக்கொரு புதிய பாதையை போட்டுக்கொண்டவர். மேலும், எதையும் வித்தியாசமாக யோசிப்பவர் என ரசிகர்களிடம் பிரபலமானவர். ஹவுஸ்புல், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, இரவின் நிழல் என வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியவர். மற்ற இயக்குனர்களின் படங்களிலும் பார்த்திபன் நடித்துள்ளார்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இரவின் நிழல் வெளிவந்த்து. அதேபோல், ஒத்த செருப்பு படத்தில் ஒரே கதாபாத்திரத்தை வைத்து இயக்கியிருப்பார். சினிமா விழாக்களில் இவர் பேசினாலும் எதிர்பார்ப்பு எகிறும். ஏனெனில், பார்த்திபன் வித்தியாசமாக என்ன பேசப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் பார்த்திபன் நடித்திருந்தார்.
பார்த்திபன் இயக்கத்தில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. உதவி இயக்குனர் ஒருவர் திரைப்படம் எடுக்க படும் பாடுதான் இப்படத்தின் கதை. இப்படத்தில் தம்பி ராமையா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் ஒரு காட்சியில் ‘குறும்படும் எடுக்கும் குரங்குகளா’ என ஒரு வசனம் பேசியிருப்பார். அதாவது, குறும்படம் மூலம் பல இளம் இயக்குனர்கள் உருவாவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் அப்படி பேசியிருப்பார்.
இது பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள பார்த்திபன் ‘ சினிமாவில் பல வருடமாக உதவியாளராக இருந்து படம் இயக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் ஒரு வயதானவர், குறும்படங்கள் மூலம் இயக்குனராக மாறும் இளம் இயக்குனர்கள் மீது பொறாமை கொண்டு பேசுவது போலத்தான் அந்த வசனம் வரும். ஆனால், நான் கார்த்திக் சுப்பாரஜை குறிப்பிடுவதாக கூறி நடிகர் பாபிசிம்ஹா ஒருநாள் விடிய விடிய என்னை தூங்கவிடவில்லை. கார்த்திக் சுப்பாராஜ் எனக்கும் நண்பர்தான். நான் அவரை குறிப்பிடவில்லை என அவரிடம் கூறினேன்’ என அந்த பேட்டியில் பார்த்திபன் பேசியிருந்தார்.
கார்த்திக் சுப்புராஜ் குறும்படங்களை எடுத்து வந்தவர். பீட்சா படம் மூலம் சினிமா இயக்குனராக மாறினார். பாபி சிம்ஹாவை வைத்து ஜிகர்தண்டா படத்தை எடுத்தார். அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பெரும்பாலான படங்களில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளி விழா கொண்டாடிய புரட்சித்தலைவர் படங்கள் – ஒரு பார்வை