கை மேல காசு!.. ஆனாலும் 100 ரூபாய்க்காக அல்லோலப்பட்ட சந்திரபாபு.. என்ன மேட்டரா இருக்கும்?..
தமிழ் சினிமாவில் முதன் முதலில் மேலை நாட்டு நாகரீகத்தை கொண்டு வந்த பெருமை நடிகர் சந்திரபாபுவையே சேரும். ஸ்டைலிஷான பேண்ட் சர்ட், அந்த பேண்டில் அழகாக கைக்குட்டையை தொங்கவிடுவது போன்ற தோற்றத்தில் அனைவரையும் வெகுவாக ஈர்த்தார்.
யாரையும் பேர் சொல்லியோ வாடா போடா என்றோ கூப்பிட மாட்டார். மிஸ்டர், மிஸ், மிஸ்ஸஸ் என்று மிகவும் மரியாதையாக அழைக்கக் கூடியவர் சந்திரபாபு. ஒரு நடிகருக்கு உள்ள அடையாளமே அவர் மறைந்தாலும் அவரின் புகழை காலங்காலமாக பேசிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை.
அந்த வகையில் சந்திரபாபு மிகப்பெரிய புகழை அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் இல்லையென்றாலும் அவரை போல இன்றும் பல மேடைகளில் மிமிக்ரி செய்து அவரை நியாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரின் நடிப்பாலும் நகைச்சுவையாலும் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நடிகராக விளங்கினார் சந்திரபாபு.
மற்றவர்களால் மிகவும் ஆணவம் பிடித்த நடிகர் என்ற விமர்சனத்திற்கு ஆளானவர். ஏனெனில் தன் நடிப்பின் மீது அதிக கர்வம் கொண்டவர். அதை பல பேர் திமிர் என்று சொன்னதுண்டு. ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் என்றைக்கும் கவலைப்பட்டதே இல்லை அவர்.
ஒரு சமயம் தனது நண்பரான ரெங்கராஜன் என்பவரிடம் 100 ரூபாய் கடனாக கேட்டு வந்திருக்கிறார் சந்திரபாபு. அப்போது அந்த நண்பர் ‘உன் பின்னால் இருக்கும் நபர் யார்?’ என்று கேட்டிருக்கிறார். மேலும் அந்த நபர் ஒரு பெட்டியுடன் வந்து நின்று கொண்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சந்திரபாபு ‘ஓ அவரா? படத் தயாரிப்பாளரான நாகிரெட்டி அனுப்பிய ஆள்தான் அவர். ஒரு படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகினார். ஆனால் அவர் கூறிய சம்பளம் எனக்கு குறைவாக இருந்தது. முடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் காரணமாகவே அந்தப் படத்திற்கான அட்வான்ஸ் தொகையான 10000 ரூபாயுடன் இந்த நபரை அனுப்பி என்னை படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார். அதனால் தான் இந்த நபர் நான் எங்கு போனாலும் என்னை பின் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறார் ’ என்று பதிலளித்திருக்கிறார் சந்திரபாபு.
இதையும் படிங்க : நடிகரின் கன்னத்தை பதம் பார்க்கச் சொன்ன மாரி செல்வராஜ்… இவ்வளவு ஸ்டிரிக்ட்டாவா இருக்கிறது!
உடனே அவரது நண்பரான ரெங்கராஜன் ‘கண்முன்னே 10000 ரூபாய் வந்து நிற்கிறது. அதை விட்டு 100 ரூபாய்க்காக என்னிடம் கடன் கேட்டு நிற்கிறீயே? ’ என்று சொல்ல அதற்கு சந்திரபாபு ‘it's none of your business’ என்று சொல்லிவிட அந்த 10000 ரூபாய் பணத்தையும் வாங்கமாலேயே போய்விட்டாராம் சந்திரபாபு. இவர் நண்பரும் 100 ரூபாயும் கொடுக்கவில்லை. என்ன மாதிரியான சிந்தனையில் இருப்பார் என்றே தெரியாது சந்திரபாபு. இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.