Cinema History
நான் உங்களை ‘அப்பா’ன்னு கூப்பிடவா?!.. சந்திரபாபு கேட்ட கேள்வியில் நெகிழ்ந்து போன காமராஜர்..
தமிழ் திரையுலகில் 50,60களில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் சந்திரபாபு. மேலைநட்டு பாணியில் நடிக்கும் நடிகர் இவர். தான் நடிக்கும் படங்களில் மேலை நாட்டு நடனங்களை ஆடி நடிப்பார். வெஸ்டர்ன் ஸ்டைல் வாழ்க்கை, நடனம் ஆகியவற்றை பெரிதும் விரும்பிய நடிகர் இவர். மிகவும் நன்றாக பாடுவார். உடம்பை ரப்பர் போல வளைத்து கீழே விழுவார். இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கதாநயகனாகவும் நடித்துள்ளார். இவருக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. இவரின் மனைவி வேறு ஒருவரை விரும்பியதால் அவருடன் வாழ அனுப்பி வைத்துவிட்டார். அது அவரை மிகவும் பாதித்தது. ஒருபக்கம் திரையுலகில் ஏற்பட்ட சரிவால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போய் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு பின்னர் மரணமடைந்தார்.
இதையும் படிங்க: சந்திரபாபு படத்திலிருந்து ஏன் விலகினேன் தெரியுமா?!- நடிகையிடம் எம்.ஜி.ஆர் பகிர்ந்த அந்த ரகசியம்….
சந்திரபாபுவின் பூர்வீகம். அவரின் அப்பா யார்? சந்திரபாபுவின் குடும்பம் எப்படிப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது. சந்திரபாபுவின் முழுப்பெயர் ஜோசப் பனிமயதாஸ் சந்திரபாபு ரோட்ரிக்ஸ். சந்திரபாபுவின் அப்பா ரோட்ரிக்ஸ் தூத்துக்குடியை சேர்ந்தவர். இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தார். சுதந்திர வீரன் என்கிற பத்திரிக்கையும் அவர் நடத்தி வந்தார். சத்தியாகிரக இயக்கத்தில் கலந்து கொண்டதால் அவரின் குடும்ப சொத்துக்களை பிரிட்டிஷ் அரசு பறிமுதல் செய்ததோடு, அவரை இலங்கைக்கு நாடு கடத்தியது. சந்திரபாபுவின் இலங்கையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை படித்தார். அதன்பின் அவரின் குடும்பம் சென்னை திரும்பியது. அதன்பின்னர்தான் சந்திரபாபுவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையே ஏற்பட்டது.
சந்திரபாபுவின் அப்பா தூத்துக்குடியில் வசித்த போது சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதால் அடிக்கடி கைது செய்யப்படுவார். எனவே, மனைவி மற்றும் குழந்தைகளை குற்றாலத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி இல்லத்தில் விட்டு செல்வாராம். அப்போது அந்த குழந்தைகளை காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பார்த்துகொண்டார். அவர்தான் கர்மவீரர் காமராஜர். சிறுவனான சந்திரபாபு மிகவும் சுட்டியாக இருப்பார். ஒருமுறை அருவின் அருகே சென்ற சந்திரபாபு தண்ணீரில் குதித்துவிட அவரை தேடிவந்த காமராஜர் தண்ணீரில் குதித்து அவரை காப்பாற்றியுள்ளார்.
அதன்பின் அவரை தனது தோள்மீது அமர வைத்து தூக்கி வந்தார். அப்போது சந்திரபாபு ‘ உங்கள் பையனை என்னுடன் விளையாட அழைத்து வாங்க’ என கேட்க, காமராஜரோ ‘நான் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை சாமி’ என சொல்ல, அதற்கு சந்திரபாபு ‘அப்படின்னா உங்களுக்கு குழந்தை இருக்காதுல்ல. நான் வேணா உங்களை அப்பான்னு கூப்பிடட்டுமா?’ என கேட்க, காமராஜர் ‘நீயும் எனக்கொரு பிள்ளைதானப்பா’ என நெகிழ்ந்து போனாராம்.
பின்னாளில் சந்திரபாபு அனாதையாக இறந்துபோக இந்த தகவல் காமராஜருக்கு சொல்லப்பட்டது. ‘நான் உங்களை அப்பா என கூப்பிடட்டுமா?.. சந்திரபாபு சிறுவனாக இருந்தபோது கேட்ட கேள்வி அவருக்கு ஞாபகத்திற்கு வர அவரின் கண்கள் கசிந்தது.
இதையும் படிங்க: கடைசி காலத்தில் நேரில் வரவழைத்து அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர்!.. நெகிழ்ந்து போன கமல்ஹாசன்!..