“பெரிய ஆள் ஆகிட்டா என்னைய மறந்துடுவாங்க”… “லவ் டூடே” இயக்குனர் மீதுள்ள வருத்தத்தை பகிர்ந்த மூத்த நடிகர்…
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த “லவ் டூடே” திரைப்படம் எதிர்பாராவிதமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன் இயக்கிய “கோமாளி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், “லவ் டூடே” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.
அந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு நடிகராக பிரதீப்பை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் “லவ் டூடே” திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த சந்தேகங்கள் எல்லாம் தவிடுபொடியாகியுள்ளது.
“லவ் டூடே” திரைப்படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “ஆப் லாக்” என்ற குறும்படத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இக்குறும்படத்தையும் பிரதீப் ரங்கநாதனே இயக்கியிருந்தார். இந்த குறும்படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்தவர் டெல்லி கணேஷ். ஆனால் “லவ் டூடே” திரைப்படத்தில் இந்த கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட டெல்லி கணேஷ், “இளம் இயக்குனர்கள் யாரும் எனக்கு உதவியதே இல்லை. அவர்கள் வளரும்போது என்னை பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டால் அவ்வளவுதான். அவர்களை கையில் பிடிப்பது கஷ்டம்.
என்னை வைத்து குறும்படம் எடுத்த இயக்குனர்கள், பின்னாளில் பெரிய ஆளாக வளர்ந்தபின், அந்த இயக்குனர்கள் யாரும் மீண்டும் வந்து என்னை சந்தித்ததே இல்லை” என மிகவும் வருத்தத்துடன் கூறியிருந்தார். டெல்லி கணேஷ் இவ்வாறு கூறியது பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.