எம்ஜிஆர், சிவாஜியை விட இந்த விஷயத்தில் ஜெமினிகணேசன் தான் டாப்...காதல் மன்னன் ஆன சுவாரசிய கதை..!
அந்தக் காலத்தில் காதல் மன்னன் யார் என்றால் டக்கென்று ஜெமினிகணேசன் என்று தான் சொல்வோம். அவருக்கு இன்னொரு பெருமை உண்டு. பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்திற்குப் பிறகு வந்தவர்கள் தான் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன்.
இவர்களில் முதன் முதலாக வெள்ளிவிழா படம் கொடுத்தவர் ஜெமினிகணேசன் தான். படத்தின் பெயர் கல்யாண பரிசு.
இந்தப் படம் வந்து பல ஆண்டுகள் ஆன பின்னர் தான் சிவாஜிக்கு பாசமலரும், எம்ஜிஆருக்கு எங்கவீட்டுப்பிள்ளையும் வெள்ளிவிழா கண்டன.
காதல் மன்னன் என்பதற்கு தப்பாமல் இவரது உருவம் அமைந்தது. குளிர்ச்சியான குரல், யதார்த்தமான நடிப்பு, நாகரிகக் கோட்டைத் தாண்டாத காதல் என்று இவர் தனக்கே சில அடையாளங்களைத் தனித்துவமாக உருவாக்கிக் கொண்டார். இதனால் ஏகோபித்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
இவர் காதல் மன்னன் ஆன கதை சுவாரசியமானது. அதைப் பற்றிப் பார்க்கலாமா...
இக்காலக் காதல் விரசமானது. அருவருப்பானது என்று சொல்லத்தக்க வகையில் தான் பல படங்களில் ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனங்களுடனும் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அக்காலத்தில் ஜெமினிகணேசனின் காதல் படங்களைப் பார்த்தால் நமக்கே காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
கண்ணியமான காதலைத் தான் காட்டுவார்கள். காதலனும் சரி. காதலியும் சரி. அப்படித் தான் நாகரிகமாக நடந்து கொள்வார்கள். ஜெமினியைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு கௌரவமாக காதல் காட்சிகளில் நடித்து இல்லை என்றே சொல்லலாம்.
மனம் போல் மாங்கல்யம் படத்தில் சாவித்திரியும், ஜெமினிகணேசனும் நடித்தனர். சாவித்திரி புடவை உடுத்திக் கொண்டு அடக்க ஒடுக்க கிராமப் பெண்ணாக வருவார். இருவரும் நடித்த காதல் காட்சிகளைப் பார்க்கும்போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல என்ற எண்ணம் ஏற்படும்.
அவ்வளவு கனக்கச்சித பொருத்தம். இப்போது சொல்வார்களே அது போல அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆனது. அந்தக் காதல் நமக்குள் மென்மையான காதல் உணர்வைத் தூண்டியது. படத்தைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்தது.
அவர்களுக்குள் நிஜ வாழ்வில் காதல் மலரவும் அந்தப்படமே காரணமானது. காதலனோ எந்த சந்தர்ப்பம் வந்த போதும் எல்லை மீறவில்லை. அதுதான் அவனது உயரிய ஒழுக்கத்தைக் கோடிட்டுக் காட்டியது.
கணவனே கண்கண்ட தெய்வம் என்ற படத்தில் ஜெமினிகணேசன் நடித்தார். இந்தப்படத்தில் காதலிக்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருந்தார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அந்தக்கால தாத்தாமார்கள், பாட்டிமார்களிடம் இப்போதும் கேட்டுப் பாருங்கள். அந்தப்படத்தைப் பற்றி கதை கதையாக ரசனையுடன் சொல்வார்கள்.
மிஸ்ஸியம்மா என்று ஒரு படம். காதலி சாவித்திரி. இருவரும் நம் பண்பை வளர்க்கும் விதத்தில் ஆடை அணிகலன்களுடன் தோன்றி அசத்தினர். ஒருவரை ஒருவர் தொடவே மாட்டார்கள். அவள் அவனை வெறுக்கவும் செய்தாள். இன்னும் இருவரும் காதலிக்கவில்லையே என்று நமக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள்ளும் மெல்லிய காதல் அரும்பியது. அப்போது அதுதான் உயர்ந்து நின்றது. அது ஒரு காதல் காவியமாகத் தான் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளது.
யார் பையன் என்று ஒரு படம். அதிலும் ஜெமினி, சாவித்திரி ஜோடி தான். ஒருவரை ஒருவர் மனதார நேசித்தார்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் சரி. யார் தன் மனதில் இடம் பெற்றார்களோ அவர் வேறு ஒரு பெண்ணின் மனதில் இடம்பெறுவதை விரும்ப மாட்டார்கள். காதலனைச் சந்தேகப்படுகிறாள்.
ஆனால் வெறுக்கவில்லை. அதனால் மேலும் காதல் வளர்கிறது. ஊடலும், கூடலும் தான் வாழ்க்கையில் இன்பம் என்பதை படம் தௌ;ளத் தெளிவாக நமக்கு விளக்குகிறது. அதேபோல காதலில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பாடமாக நமக்குத் தந்தார் ஜெமினிகணேசன். படத்தின் பெயர் எதையும் தாங்கும் இதயம். வாய்ப்பு இருந்தால் நீங்களும் பாருங்கள்.
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ஜெமினிகணேசன் வைஜெயந்திமாலாவை பல தடைகளைத் தாண்டிக் காதலித்து வெற்றி பெறுவார். வீரத்தால் காதலை வெல்லும் கதாபாத்திரத்தை ஏற்று இளம் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.
அதே போல கல்யாணப்பரிசு படத்தில் தியாகம் செய்யும் காதலன். காதலிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான். அவளது விருப்பத்திற்கேற்ப நடக்கிறான். இருந்தாலும் அவன் மனதில் அமைதி இல்லை.
அவன் வாழ்க்கை முழுவதும் எதிர்நீச்சல் போடுவதாகவே அமைந்தது. இறுதியில் காதல் என்ன ஆனது என்பதை படம் விளக்குகிறது. இன்னும் பார்த்திபன் கனவு, கொஞ்சும் சலங்கை, ஏழைப்பங்காளன், கட்டபொம்மன் என பல படங்களை ஜெமினியின் காதலுக்கு உதாரணமாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி தாய்க்குலங்கள் உள்பட சகல தரப்பினரையும் காதல் காட்சிகளில் கவர்ந்து இழுத்ததால் தான் ஜெமினிகணேசன் காதல் மன்னன் ஆனார்.