நடுராத்திரியில் கிடைத்த சினிமா வாய்ப்பு... கண்கலங்கி கற்பூரம் ஏற்றிய கவுண்டமணி!...
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல வருடங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் ஹீரோ, குணச்சித்திரம், வில்லன், காமெடி நடிகர் என கலக்கியவர். இவர் அதிகமாக நடித்தது காமெடி வேடத்தில்தான். இவரையும், செந்திலையும் திரையில் பார்த்தாலே ரசிகர்கள் சிரித்துவிடுவார்கள். இவரின் காமெடிக்காகவே தியேட்டருக்கு போன ரசிகர்களும் உண்டு.
ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், பிரபு,சத்தியராஜ், சரத்குமார் என பலரின் படங்களிலும் கவுண்டமணி நடித்துள்ளார். சில படங்களில் கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகனாகவே நடித்தார். பல வருடங்கள் பீக்கில் இருந்த கவுண்டமனி தற்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை. இது யோகிபாபுவின் காலமாக மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் நிலவி வருகிறது.
கோவையை சேர்ந்த கவுண்டமணி சினிமாவில் நுழைவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் நாடகம், சினிமா என மாறி மாறி நடித்து வந்தார். அப்போதுதான் பாரதிராஜா இயக்கத்தில் உருவான பதினாறு வயதினிலே படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் ரஜினியுடன் சில காட்சிகள் வருவார்.
‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என வசனம் பேசுவார். அந்த வேடத்திற்கு அவரை பாரதிராஜாவிடம் சிபாரிசு செய்தவர் அந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த பாக்கியராஜ். எனவே, பெரிய இயக்குனர், நல்ல உதவி இயக்குனர்கள். இவர்களிடம் நெருக்கமானால் வாய்ப்புகளை பெறலாம் என நினைத்த கவுண்டமணி பாக்கியராஜிடம் நல்ல வாய்ப்பை கேட்டு வந்துள்ளார்.
அந்த படத்திற்கு பின் பாரதிராஜா ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை இயக்கினார். இந்த படத்தில்தான் ராதிகா அறிமுகமானார். இந்த படத்தில் ராதிகா மீது ஆசைப்படும் அவரின் அக்கா கணவராக யாரை நடிக்க வைக்கலாம் என பாரதிராஜா யோசித்தபோது கவுண்டமணி பெயரை சொன்னவர் பாக்கியராஜ்.
நள்ளிரவில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த கவுண்டமணியை தட்டி எழுப்பி அருகிலிருந்த கோவிலுக்கு அழைத்து சென்று கற்பூரம் ஏற்று என்றாராம். ‘நல்ல வாய்ப்பு கிடைச்சிடுச்சா?’ என கவுண்டமணி ஏக்கமாக பார்க்க, ‘எல்லாம் கிடைச்சிடுச்சி.. நல்ல வேடம்.. கற்பூரத்தை ஏத்து’ என சொல்ல கண்கலங்கிய படியே கற்பூரத்தை கவுண்டமணி ஏற்றினாராம்.
இந்த தகவலை பாக்கியராஜே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms