Categories: latest cinema news latest news

Vijay: என் ஆதரவு விஜய்க்குதான்!.. தவெகவில் இணையும் பிரபல நடிகர்!..

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த சில வருடங்களாகவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். கரூர் சம்பவம் அவரை ஒரு மாத காலம் முடக்கிப்போட்ட நிலையில் தற்போது அதிலிருந்து விஜய் மீண்டுவிட்டார். வருகிற 9ம் தேதி புதுச்சேரியில் பொதுக்கூட்டமும் நடைபெறவிருக்கிறது. ஒருபக்கம், 2026 தேர்தலை சந்திக்க கூட்டணி வியூகத்தையும் தவெக வகுத்து வருகிறது.

எங்கள் கட்சியில் இணைந்தால் ஆட்சி, அதிகாரம் இரண்டிலும் பங்கு கொடுப்போம் என விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஒரு பக்கம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சில நாட்களுக்கு முன்பு தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் அவருக்கு முக்கிய பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஜீவா ரவி இன்று கோபிசெட்டிபாளையம் சென்று செங்கோட்டையனை சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் செய்தியாளரிடம் பேசிய ஜீவா ரவி ‘செங்கோட்டையன் சார் எங்க குடும்பத்திற்கு காட் ஃபாதர் போல.. அவர் இல்லை என்றால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.

அவர் எந்த வழியில் பயணிக்கிறாரோ.. அதே வழியில் நானும் பயணிப்பேன்.. விஜய் சார் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.. எங்கள் துறையை சேர்ந்த ஒருவர் நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. அவருக்கு துணை நிற்போம்.. நானும் விரைவில் தவெகவில் இணைவேன்.. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.. அதுபற்றி கண்டிப்பாக உங்களுக்கு தெரிவிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

Published by
சிவா