கார்த்தியை பயமுறுத்திய ஹேக்கர்கள்!..ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதற்கு முன் வெளியான பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக அனைவரையும் சிரிக்க வைத்தார்.
அடுத்ததாக ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஇமானுவேல் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜைகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மேலும் இந்த ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்து விட்டதாக அவரே தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
மேலும் முகநூல் அலுவலர்களால் தன்னுடைய முகநூல் பக்கம் சரிசெய்யப்படுவதாகவும் சீக்கிரமே அதில் மீண்டும் வருகிறேன் என்பது மாதிரியான ஒரு பதிவை தனது ரசிகர்களுக்காக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி.