நான் தயார் செய்து வேண்டாம்னு சொன்ன கதை தான் ‘ரோஜா’!. பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!.
காலத்தால் என்றும் அழியாத படங்களில் என்றைக்குமே இருக்கிற படமாக ரோஜா திரைப்படம் விளங்கும். முற்றிலும் புதுமுகங்களை வைத்து மணிரத்னம் இயக்குகின்ற ஒரு காதல் ஓவியம் தான் ரோஜா திரைப்படம். இந்த படத்தின் மூலம் தான் ஏஆர். ரகுமானும் அறிமுகமாகிறார்.
முதல் படத்திலேயே ஏஆர்.ரகுமான் தரமான முத்திரையை பதித்தார். படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சொல்லமுடியாத உணர்வுகளை மனதில் சுமக்கும்.
ரோஜா கதை கரு
ஒரு பக்கம் காதல் மறுபக்கம் தவிப்பு, இன்னொரு பக்கம் தீவிரவாதம் என அனைத்தையும் ஒருங்கே நம் கண்முன் தத்ரூபமாக காட்டியிருப்பார் மணிரத்னம். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஏராளமான பெண் ரசிகைகள் அமைந்தனர்.
ஒரு சாக்லேட் பாயாக லவ்வபில் பாயாக கனவு நாயகனாக வலம் வந்தார் அரவிந்த் சாமி. இப்படி பட்ட கதையை மணிரத்னம் இயக்கியிருக்கிறார் என்றால் ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் இந்த கதை ஒரு பிரபல வில்லன் நடிகரிடமிருந்து கைமாறியிருக்கிறது என்று தெரிந்ததும் கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியது.
நடிகர் கிட்டி
அவர் வேறு யாருமில்லை. நடிகர் கிட்டி. மணிரத்னத்தின் அநேக படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருப்பார். இவருடைய முதல் படமே மணிரத்னம் இயக்கத்தில் அமைந்த நாயகன் படம் தான். சூரசம்ஹாரம், சத்யா, பாட்ஷா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் நடிகர் கிட்டி.
நடிக்க வருவதற்கு முன் இவருக்கு எழுத்தில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. சில சமயங்களில் கதாபாத்திரங்களின் உருவாக்கத்திற்கு மணிரத்னத்திற்கு சில சமயங்களில் உதவியாக இருந்திருக்கிறார் நடிகர் கிட்டி. மணிரத்னம் கூட அடிக்கடி சொல்வாராம். ‘ நீ கதாசிரியராக வரவேண்டியவன், நடிக்க வந்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய் ’என்று சொல்வாராம்.
கதை விவாதம்
ஒரு சமயம் தளபதி பட க்ளைமாக்ஸ் சீனில் பிரேக் நேரத்தில் கிட்டியும் சந்தோஷ் சிவனும் ஒரு கதையை பற்றி தீவிரமாக ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது மலையாளத்தில் இந்த கதை பண்ணலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார் கிட்டியும் சந்தோஷ் சிவனும். இது மணிரத்னத்திற்கு தெரியவர இதை தமிழில் பண்ணு, நான் தயாரிக்கிறேன் என்று சொன்னாராம். அதன் பின் மணிரத்னம் ஒரு ஒன் லைன் கதையை கூறி கிட்டியிடம் இதை வைத்து ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து படமாக்கு என்று சொன்னாராம்.
இவரும் அந்த ஒன் லைனை வைத்து ஒரு மாத காலம் வேலை பார்த்திருக்கிறார். ஒரு நேரத்தில் இந்த கதை நமக்கு செட் ஆகாது என்று தன் தயாரித்த ஸ்கிரிப்டை மணிரத்னத்திடமே கொடுத்து விட்டாராம். அது தான் ரோஜா பட கதை. அதன் பிறகு தான் மணிரத்னம் இயக்கியிருக்கிறார். தளபதி பட க்ளைமாக்ஸ் சமயத்தில் கிட்டி யோசித்து வைத்த கதை தான் ‘தசரதன்’ திரைப்படத்தின் கதையாம். இந்த படத்தில் நடிகர் சரத்குமார், நடிகர் சிவக்குமார், நடிகை ஹீரா, சரண்யா பொன்வன்னன், காந்திமதி போன்ற பலரும் நடித்திருந்தனர்.