இத்தன வருஷம் தாண்டியும் பேசுவாங்கன்னு அப்ப தெரியல!.. பாட்ஷா அனுபவம் பகிரும் கிட்டி...
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கிட்டி. ராஜ கிருஷ்ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர். சினிமாவில் கிட்டி என அழைக்கப்பட அதுவே ரசிகர்களுக்கும் பழகிப்போனது. இயக்குனர், கதாசிரியர், நடிகர் என திரையுலகை கலக்கியவர் இவர். கமல் நடிப்பில் வெளியான சூரசம்ஹாரம், சத்யா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். குறிப்பாக இவரின் குரல் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.
அதன்பின் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். கிட்டத்தட்ட 100 படங்களில் கிட்டி நடித்திருப்பார். விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்திருந்தார். சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சரத்குமார் நடித்த தசரதன் மற்றும் பிரசாந்த் நடித்த கிருஷ்ணா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி நடிப்பில் மாஸ் ஹிட் அடித்த பாட்ஷா படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒரு காட்சியில் வந்தாலும் அவரின் நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அவர்தான் மாணிக்கம் என்கிற பெயரில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் ரஜினியை கண்டுபிடிப்பார். இவர் ரஜினியை வர சொல்லும் காட்சியும், அவரை பார்க்க ரஜினி வரும் காட்சியும், அவரை பார்த்ததும் கிட்டி எழுந்து நிற்கும் காட்சியும் தியேட்டரில் விசில் பறக்கும்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பாட்ஷா படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய கிட்டி ‘அந்த காட்சியில் நான் நடித்த போது 35 வருடங்களுக்கு பின்பும் இந்த காட்சியை பற்றி ரசிகர்கள் சிலாகித்து பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பின்னணி இசையோடு அந்த காட்சியை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள்’ என அவர் பேசியுள்ளார்.