Cinema News
“அவர் பேரை கெடுக்குறதுக்குன்னே வருவீங்களா?”… கேமராமேனை லெஃப்ட் ரைட் வாங்கிய மம்மூட்டி… அப்படி என்ன நடந்தது??
கடந்த 2002 ஆம் ஆண்டு மம்மூட்டி, ஹம்சவர்தன், லீனா, ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜூனியர் சீனியர்”. இத்திரைப்படத்தை ஜெ.சுரேஷ் இயக்கியிருந்தார். டி.ராஜேஷ் என்பவர் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவில் நடைபெற்றது. அப்போது முதல் நாள் மம்மூட்டி நடிக்க இருக்கும் ஒரு காட்சியை படமாக்கத் தொடங்கினார்கள்.
அதில் மம்மூட்டி ஒரு உயரமான புத்தர் சிலையை முட்டிப்போட்டு கும்பிடுவது போன்று படமாக்கப்பட்டது. அப்போது கேமரா மேன், மம்மூட்டிக்கு எதிரே அவர் முட்டிப்போட்ட உயரத்திற்கு சமமான உயரத்தில் கேமராவை வைத்து அந்த காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்.
அதனை பார்த்ததும் மம்மூட்டிக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டதாம். உடனே இயக்குனரை பார்த்து முறைத்துவிட்டு, ஒரு ஓரத்தில் சென்று உட்கார்ந்துவிட்டாராம். மம்மூட்டி இவ்வாறு செய்தது இயக்குனர் சுரேஷுக்கு தூக்கி வாரிப்போட்டுவிட்டதாம்.
“என்ன ஆச்சு? எதற்காக இப்படி முறைத்துக்கொண்டு போய் உட்கார்ந்துவிட்டார்” என்று சுரேஷுக்கு புரியவில்லை. ஆனால் மம்மூட்டி கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. ஆதலால் படக்குழுவினர் யாரும் அவர் அருகே செல்ல பயந்தார்களாம்.
எனினும் இயக்குனர் சுரேஷ், மம்மூட்டியின் அருகில் சென்று உட்கார்ந்து அவரது கையை பிடித்து “என்ன ஆச்சு சார்?” என மெதுவாக கேட்டாராம். அவர் அப்படி கேட்டதும் மம்மூட்டி, சில நிமிடங்கள் மௌனத்திற்குப் பிறகு “கேமரா மேன் யாரு?” என கேட்டாராம். அதற்கு சுரேஷ் கேமரா மேனின் பெயரை சொல்லிவிட்டு பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக இருந்தவர் என்ற விஷயத்தையும் கூறினார்.
“அந்த கேமரா மேனை வரச்சொல்லு” என மம்மூட்டி கூறினாராம். உடனே கேமரா மேன் அருகில் ஓடிவர “பி.சி.ஸ்ரீராமின் பெயரை கெடுப்பதற்காகவே வந்திருக்கியேடா. சினிமாவோட இலக்கணம் தெரிஞ்சிதான் நீ கேமராமேன் ஆகுனியா, இல்ல கேமரா கிடைச்சதுன்னு வந்து கேமரா மேன் ஆகுனியா?” என மம்மூட்டி கத்தினாராம். மம்மூட்டி அவ்வாறு கேட்டவுடன் கேமரா மேனுக்கு வியர்த்து கொட்டிவிட்டதாம்.
மேலும் தொடர்ந்த மம்மூட்டி “கேமரா ஆங்கிள் எதற்கெதற்கு எப்படி வைக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கு உனக்கு தெரியுமா? தெய்வம் எங்கே இருக்கு? சொல்லு” என கேட்டாராம். அதற்கு கேமரா மேன் “தெய்வம், மேல இருக்குது சார்” என்றாராம்.
“அப்போ ஒருத்தர் தெய்வத்தை மேலே பார்த்து கும்புடுற மாதிரி ஷாட் வச்சா, அடிப்படையில் கேமராவை மேல வச்சி எடுக்கனும்டா. இப்படி எனக்கு சமமான உயரத்துல வச்சி எடுத்தா உனக்கு சினிமா தெரியலைன்னு அர்த்தம்டா” என கண்டபடி திட்டினாராம்.
“இதுதான் கடைசி. இனிமே இந்த படத்துல சினிமா இலக்கணத்தை மீறி எதாவது ஷாட் வச்சன்னு வை, நான் இந்த படத்துல நடிக்கவே மாட்டேன்” என கூறினாராம். இந்த சம்பவத்திற்குப் பிறகு கேமரா மேன் கேமராவை மேலே செட் செய்தாராம். அதன் பிறகுதான் மம்மூட்டி அந்த காட்சியில் நடித்துக்கொடுத்தாராம்.