பாரதிராஜாவோட அறிமுகம்னா சும்மாவா...இவரு மட்டும் இந்தப்படத்துல நடிச்சிருந்தாருன்னா எங்கேயோ போயிருப்பாரு...!
மன்சூர் அலிகான் தனது இளமைகால சினிமா நினைவுகளை பகிர்கிறார்.
முகமது மீரான். முதலில் சர்க்கரை மீரான்..என பெயர் வைத்தார்கள். ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள ஜவ்வாது பட்டி தான் நான் பிறந்த ஊர்.
6 மாத கைக்குழந்தையாக இருக்கும்போதே கரூர் பள்ளப்பட்டிக்கு பெற்றோர் வந்துட்டாங்க. வளர்ந்தது எல்லாம் இங்க தான். இங்க 10வது வரை படிச்சேன். இது என்னோட வசந்தகாலங்கள். இலக்கிய மன்றச் செயலாளரா நான் தான் எப்பவும் தேர்ந்தெடுக்கப்படுவேன்.
மன்சூர் அலிகான்னு விஜயகாந்த், ராவுத்தர், செல்வமணி தான் மாற்றுனாங்க. கான்னு முடியணும்னு சொன்னாங்க. பத்து பேரை எழுதிக்கொடுத்தேன். இதை செலக்ட் பண்ணாங்க. அம்மா பேரு சகோராம்மாள், அப்பா மீசைக்கார அப்துல் சலாம் ராவுத்தர். வீரம் மிகுந்தவர். சிலம்பாட்டம் எல்லாம் கத்துக்கொடுப்பார். சின்னவயசுல என்னை நீ ரஜினிகாந்த் மாதிரி பண்ணுற அப்படி இப்படின்னாங்க.
அப்புறம் தான் என்னடான்னு பார்த்தா 16 வயசுல மலையாண்டிப்பட்டி ஊர்ல 16வயதினிலே படம் பார்த்தேன். அப்பப்ப அண்ணன் தியேட்டருக்கு கூட்டிப் போவாரு. குலேபகாவலி, தாய்சொல்லைத் தட்டாதே படம்லாம் பார்த்தேன். தாய்சொல்லைத் தட்டாதே படத்துக்கு தாய் சொல்லைத் தட்டிட்டு சுவர் ஏறிக் குதிச்சு படம் பார்த்துட்டு வந்துருவோம். வந்தா அடி நிச்சயம். பெரிய வாசக்கதவு இரண்டு பக்கமும் இருக்கும். அதைத் தட்டிக்கிட்டே இருப்போம். திறக்க மாட்டாங்க.
அப்புறம் மெதுவா திறந்து விட்டுட்டு ஒளிஞ்சிக்கிடுவாங்க. உள்ள வந்த உடனே முட்டி கால்கள்ல அடிக் கிடைக்கும். படம் பார்க்க விட மாட்டாங்க. சினிமா அவங்களும் பார்த்ததுல்ல. வெளியூருக்கும் எங்கும் போறதில்ல.
10வது படிக்கையிலே நான் நடிகனாகணும்ங்கற லட்சியம் எனக்குள்ள உருவாயிடுச்சு. புத்தகங்கள் நிறைய படிப்பேன். லைப்ரரியில எல்லா புத்தகங்களும் அறிஞர் அண்ணா, ஜெயகாந்தன், தமிழ்வாணன், கவிதைத் தொகுப்புகள்னு நிறைய படிப்பேன்.
அப்புறம் நாலு வருஷத்துல பாம்பே போய் ஆக்டிங் கோர்ஸ் பண்ணுனேன். நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் சேர்ந்தேன். கராத்தே லாம் கத்துக்கிட்டேன். கொண்டு போன பணம் எல்லாம் தீர்ந்துருச்சு. அங்க இருந்து என்னடா செய்யன்னு நினைச்சேன். பிரண்ட்ஸ்லாம் நீ சென்னைக்குப் போறதுதான் பெட்டர்னாங்க. அங்கிருந்து சென்னை வந்தேன். 9 வருடமாகப் குரூப் டேன்சரா தான் இருந்தேன்.
நடிக்க வாய்ப்பு இல்லாம கஷ்டப்பட்டேன். அப்போ சத்யராஜ் நடிச்ச வேலை கிடைச்சிடுச்சுன்னு ஒரு படம். அதுல முதல்ல சின்ன வேஷம் பண்ணுனேன். பாலா அண்ணன் சாரு, ராதாபாரதி இவங்களுக்கு எல்லாம் நான் சின்ன சின்ன உதவிகள் செஞ்சிக்கொடுத்து பழக்கம் வச்சிக்கிட்டு இருந்தேன். தொடர்ந்து கேப்டன் பிரபாகரனில் வாய்ப்பு வந்தது. பாலா அண்ணன் சாரோட விஜயகாந்த் ஆபீசுக்குப் போனோம். ஒரே நேரத்துல நான் 3 படத்துக்கு செலக்ட் ஆனேன். வேலை கிடைச்சிடுச்சு, கேப்டன் பிரபாகரன், புதுநெல்லு புதுநாத்து.
நான் வேலை கிடைச்சிடுச்சுக்குப் போயிட்டேன். பண்ணிட்டு வந்தா ராவுத்தர் திட்டுறாரு. ஏன்டா போயி அடியாளு வேஷம் வாங்கிட்டு வந்துட்டியான்னாரு. ஷாக்காயி அப்புறம் போகவே இல்ல. புதுநெல்லு புதுநாத்துக்கு பாரதிராஜா சார் கூப்பிட்டு கேட்டாரு ஹீரோவா வில்லனான்னு? அதுல போயி சின்ன வேஷம் நடிச்சிட்டு வந்தீயன்னு கூட இருக்குற கரிகாலன் இவங்கள்லாம் போட்டுக் கொடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன்.
அப்புறம் என்னை விட்டுட்டாங்க. இது எப்போ எனக்கு தெரிய வந்துச்சுன்னா...அந்த நேரத்துல தேனி சூட்டிங் ஆட்டமா பாட்டமா சாங் எடுக்குறோம். டிரெயின்ல போகும்போது உயரமா ஒருத்தர் கைகொடுத்தாரு. நான் தான் குமரேசன். நீங்க நடிக்க வேண்டிய படத்துல நான் நடிக்கிறேன்னாரு. அவரு தான் நெப்போலியன். அப்புறம் நிறைய படங்கள் தயாரிச்சேன். அரசியல்னு இறங்கிட்டேன்.