விஜயகாந்தால் கேப்டன் பிரபாகரன் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் மன்சூர் அலிகான். நடிகனாவதற்கு முன் சில படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக நடனமாடிக் கொண்டிருந்தார் மன்சூர். நடிக்கும் ஆசை ஏற்பட்டு விஜயகாந்த் மற்றும் அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரை தொடர்ந்து நேரில் சந்தித்து நச்சரித்து வாய்ப்பு கேட்டுவந்தார். எனவே, அவருக்கு கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் விஜயகாந்த்.
அந்த படம் மன்சூர் அலிகானை ரசிகர்களிடம் பிரபலமாக்கவே தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க தொடங்கினார் மன்சூர். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். விஜயகாந்தின் பெரும்பாலான படங்களில் மன்சூர் நடித்திருக்கிறார். சினிமாவில் வளர்ந்த பின் தன்னை வளர்த்து விட்டவர்களை பற்றி யாரும் யோசிக்க மாட்டார்கள். ஆனால் மன்சூர் அலிகான் அதற்கு நேர் எதிர். விஜயகாந்த் இல்லையென்றால் நான் இல்லை என்று எல்லா பேட்டிகளிலும் சொல்வார். விஜயகாந்தை கடவுள் போல பாவித்து வருபவர்தான் மன்சூர் அலிகான்.
விஜயகாந்த் மரணமடைந்தபோது அதிகாலை முதல் இரவு அவரை அடக்கம் செய்யும் வரை அவரின் உடல் அருகிலேயே இருந்தார். அந்த அளவுக்கு விஜயகாந்த் மீது அன்பும், பக்தியும் கொண்டவர். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய மன்சூரலிகான் ‘என் பொண்ணு கேப்டன் வீட்லதான் வளர்ந்தா.. என் பொண்ணு கல்யாணத்துக்கு நேர்ல வந்து வாழ்த்து சொல்லி 10 பவுன் செயின் போட்டார்.. கேப்டன் எப்பவும் கேப்டன்தான்.. இந்த பாழாப்போன அரசியல்ல போய் சேர்ந்துட்டார்.. அவர் இரண்டு முறை முதலமைச்சராக இருந்திருக்க வேண்டியது.. ஒரு லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் அவர் கூட இல்லாததனால அவரை சூழ்ச்சி செஞ்சுட்டாங்க’ என பீல் பண்ணி பேசியிருக்கிறார்.
மன்சூர் அலிகான் சொல்லும் லியாகத் அலிகான் விஜயகாந்தின் வளர்ச்சியில் முக்கியமானவர். சினிமா, அரசியல் இரண்டிலும் விஜயகாந்துக்கு ஆலோசனை சொன்னவவர். அடிப்படையில் இவர் ஒரு ரைட்டர். கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்துக்கு அனல் பறக்கும் அரசியல் வசனங்களை எழுதியவர் இவர்தான். விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.
