உன் வயசு அப்படி!.. ஒழுங்கா நடி!.. படப்பிடிப்பில் ஜெயலலிதாவை திட்டிய எம்.ஜி.ஆர்...

mgr
தமிழ் சினிமாவில் முக்கிய ஆளுமையாக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவில் நுழைந்தவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர். நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என எல்லாவாற்றிலும் சிறப்பாக செயல்பட்டவர்.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற ஹிட் படங்களை இயக்கியும் இருக்கிறார். எம்.ஜி..ஆரை நல்ல நடிகர் என்பதை விட சின்சியரான நடிகர் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர் என்றுதான் பலரும் சொல்வார்கள். தான் பெரிய நடிகர் என்றாலும் வேலை என வந்துவிட்டால் எம்.ஜி.ஆர் சின்சியராக மாறிவிடுவார்.

mgr
அவர் என்ன சொன்னாலும் திரையுலகமே கேட்கும் என்றாலும் கேமராவுக்கு முன் தான் ஒரு நடிகர் மட்டுமே.. மிகவும் கஷ்டப்பட்டு, மற்றவர்களின் உதவியால்தான் நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம் என்பதை எப்போதும் புரிந்து வைத்திருக்கும் நடிகர் அவர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடித்து 1966ம் வருடம் வெளிவந்த திரைப்படம் முகராசி.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அப்படத்தின் இயக்குனர் திருமகத்திற்கு உடல்நிலை சரியில்லை. எனவே, அந்த நாள் எம்.ஜி.ஆரே படத்தை இயக்கினார். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் கோபமாக நடந்து செல்ல வேண்டும். அவருக்கு பின்னால் ஜெயலலிதா அழுதவாரே ஓடிச்சென்று ‘அத்தான் நில்லுங்கள்.. போகாதீர்கள்’ என வசனம் பேச வேண்டும். இதுதான் காட்சி. இந்த காட்சிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஒத்திகை என்பதால் எம்.ஜி.ஆருக்கு பதில் உதவி இயக்குனர் மாரிமுத்து என்பவர் நடந்து சென்றார். அவரின் பின்னால் சென்ற ஜெயலலிதா வசனம் எதுவும் பேசமால் சிரித்துக்கொண்டே சென்றார். கேமராவில் இதை பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் கோபமடைந்துவிட்டார். ஜெயலலிதாவிடம் ‘என்ன சிரிச்சி முடிச்சிட்டியா.. இங்க வேலை பாக்க வந்தமா..இல்ல சிரிச்சி விளையாட வந்தமா?’ என கேட்டாராம். அதன்பின் அந்த காட்சியில் ஜெயலலிதா சரியாக நடித்து காட்சி எடுத்து முடிக்கப்பட்டது.
அதன்பின் ஜெயலலிதாவிடம் வந்த எம்.ஜி.ஆர் ‘அம்மு.. எனக்கு தெரியும்.. உன் வயசு அப்படி.. இந்நேரம் கல்லூரியில் உன் தோழிகளுடன் ஜாலியாக சிரித்து பேசி கொண்டிருப்பாய்.. இங்கே வந்து கஷ்டப்படுகிறாய்.. எனக்கு அது புரியுது. ஆனா இங்க நாம வேலைபாக்க வந்திருக்கோம்.. அதுக்கு சின்சியரா இருக்கணும்’ என ஆறுதல் சொன்னாராம்.