பட வாய்ப்புக்காக தூக்கில் தொங்கிய எம்.ஜி.ஆர்!.. இப்படி எல்லாம் கஷ்டப்பட்டாரா?!...

mgr
திரையுலக வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி ஒரு இடத்தை பிடிக்க எம்.ஜி.ஆர் கடந்து வந்த பாதைகள் சுலபமானது அல்ல. அவை மிகவும் கடுமையானவை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பல நாட்கள் கஷ்டப்பட்டது அவரின் குடும்பம். அப்போதெல்லாம் அவருக்கு உதவியது அவரின் நண்பர்கள்தான். சிறு வயதிலேயே எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடிக்க துவங்கினார். சிறு வயதிலும், வாலிப வயதிலும் வறுமையை மட்டுமே அதிகம் பார்த்தவர் எம்.ஜி.ஆர்.
அதனால்தான் அவர் பெரிய நடிகராகி பணம் சம்பாதித்த போது எல்லோருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தார். யாரை பார்த்தாலும் அவர் கேட்கும் முதல் கேள்வியே ‘சாப்பிட்டீர்களா?’ என்பதுதான். ஏனெனில், பல நாட்கள் பட்டினியில் இருந்தவர் அவர்.

mgr
சினிமா வாய்ப்புகளும் அவருக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. முதலில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. ஹீரோவுக்கு கிடைக்கும் வசதிகள் அவருக்கு கிடைக்காது. படப்பிடிப்பில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். பொறுமையாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தனக்கான வாய்ப்புக்காக அவர் காத்திருந்தார்.
அப்படி ‘ராஜகுமாரி’ எனும் படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இந்த படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி என்பவர் இயக்கியிருந்தார். ஒரு காட்சியில் கதாநாயகி தனக்கு கிடைக்காததால் எம்.ஜி.ஆர் தூக்கு போட்டு கொள்வது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரிடம் வந்த இயக்குனர் ‘தம்பி. இந்த காட்சியில் கொஞ்சம் தம் பிடித்து நடியுங்கள். ஷாட் இயல்பாக இருக்கும்’ என சொல்ல எம்.ஜி.ஆரும் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டு உண்மையாகவே தூக்கிலிட்டு கொண்டு நடித்தார். கதாநாயகி ஓடிச்சென்று அவரை காப்பாற்றுவது போல அந்த காட்சி எடுக்கப்பட்டது.
அந்த காட்சி முடிந்ததும் இடைவேளையின்போது அவருடன் நடித்த சக நடிகர்கள் ‘ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்தாய்?. ஏதாவது விபரீதமாக நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ என கேட்க எம்.ஜி.ஆரோ ‘நான் அப்படி நடிக்கவில்லை எனில் அடுத்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்காது. இப்படி உங்களிடம் அமர்ந்து பேசிகொண்டிருக்க முடியாது’ என்று சொல்லி சிரித்தாராம்.
தனது வெற்றிகளுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவு துணிச்சலான விஷயங்களை செய்துள்ளார் என்பது இந்த சம்பவமே பெரிய உதாரணம் ஆகும். ராஜகுமாரி திரைப்படம் 1947ம் வருடம் வெளிவந்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.