கதறிய தம்பதி!.. ஜப்பானிலும் தமிழருக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர். ஒரு நெகிழ்ச்சி செய்தி…

Published on: June 18, 2023
---Advertisement---

தன்னை நம்பி வந்து உதவி கேட்பவர்களுக்கு உதவுவது எம்.ஜி.ஆரின் குணம். சிறு வயது முதலே எம்.ஜி.ஆருக்கு அந்த பழக்கம் இருந்தது. நாடகத்தில் சம்பாதித்த பணத்தில் வாய்ப்பில்லாமல் இருக்கும் சின்ன சின்ன நாடக நடிகர்களின் பசியை போக்கியவர் அவர். அதில் சிவாஜியும் ஒருவர் என்பது பலருக்கும் தெரியாது. கொடுத்து சிவந்த கரம் எம்.ஜி.ஆருடையது. சின்ன சின்ன நடிகர்களின் வீட்டில் நடக்கும் பல திருமணங்களை எம்.ஜி.ஆர் தனது சொந்த செலவில் நடத்தி வைத்துள்ளார். அவரிடம் உதவி பெற்றவர்கள் கணக்கில் அடங்காது.

mgr
mgr

தமிழகத்தில் மட்டுமில்லை. படப்பிடிப்புக்காக அவர் ஜப்பான் சென்ற போதும் அங்கு அவர் தமிழருக்கு உதவிய சம்பவம் நடந்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக எம்.ஜி.ஆர் ஜப்பான் சென்றிருந்தார். அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு கண்காட்சியை படம்பிடிக்கும் வேலையில் எம்.ஜி.ஆர் இருந்தார். ஏனெனில், அவர்தான் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அப்போது எம்.ஜி.ஆரை நோக்கி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி வந்தனர். எம்.ஜி.ஆரின் அருகில் ‘இதயம் பேசுகிறது’ மணி இருந்தார்.

எம்.ஜிஆரிடம் அந்த தம்பதி ‘நாங்கள் நாகப்பட்டினத்திலிருந்து வருகிறோம். எங்களிடமிருந்த ஜப்பானிய பணம் திருடுபோய்விட்டது. இங்கு வேறு யாரையும் தெரியாது. எங்களுக்கு நண்பர்களோ, உறவினர்களோ இங்கே இல்லை. எனவே, நீங்கள்தான் நாங்கள் இந்தியா செல்ல உதவ வேண்டும்’ என கண்ணீர் மல்க கோரிக்க வைத்தனர். சிறிதும் யோசிக்காத எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தேவையான ஜப்பானிய பணத்தை எடுத்து கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய அந்த நபர் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அவரை தூக்கி கட்டியணைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர் ‘பத்திரமாக ஊருக்கு போங்க’ என சொல்லி அனுப்பி வைத்தாராம்.

mgr

எம்.ஜி.ஆரின் அருகிலிருந்த இதயம் பேசுகிறது மணி ‘எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஜப்பானிய பணத்தை வாங்கினோம். அவர்களிடம் கொடுத்துவிட்டீர்களே’ என கேட்க எம்.ஜி.ஆரோ ‘தமிழர் ஒருவர் கஷ்டப்படுவதாக கூறுகிறார். அவரை விட இந்த பணம் முக்கியமில்லை’ என்று சொன்னாராம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரிடம் உள்ள உதவும் குணத்திற்கு இந்த சம்பவம் பெரிய உதாரணம்…