எம்ஜிஆர் நடித்த மன்னர்கால படங்கள் - ஓர் பார்வை
பழைய படங்களில் எம்ஜிஆர் நடித்த மன்னர்கால படங்களைப் பார்ப்பது என்றாலே கொள்ளை ஆசையாக இருக்கும். இதற்கு காரணம் அவரது லாவகமான வாள் வீச்சும், சொல்லாடலும் தான். கலை அரசி, சக்கரவர்த்தி திருமகள், அரசகட்டளை படங்களில் இந்த அற்புதமான சண்டைக்காட்சிகளைக் காணலாம்.
பஞ்ச் டயலாக்கை எம்ஜிஆர் படங்களில் அப்பவே அதிகமாகக் காணலாம். இப்போது பார்த்தாலும் ஒரு புத்துணர்ச்சியைத் தரும் அத்தகைய படங்கள். அவற்றில் ஒரு சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
மன்னாதி மன்னன்
1960ல் வெளியான படம். எம்.நடேசன் இயக்கினார். கவியரசர் கண்ணதாசன் கதை எழுதினார். விஸ்வநாதன் ராம மூர்த்தி இசை அமைத்துள்ளார். எம்ஜிஆருடன் அஞ்சலி தேவி, பத்மினி, பி.எஸ்.வீரப்பா, ராகினி, எம்.ஜி.சக்கரபாணி, ஜி.சகுந்தலா உள்பட பலர் நடித்துள்ளனர்.
அச்சம் என்பது மடமையடா, ஆடாத மனமும், கனிய கனிய, கண்கள் இரண்டும், எங்களின் ராணி ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு சக்கை போடு போட்டது.
அரச கட்டளை
குட்டைப்பாவாடை உடுத்திக்கொண்டு ஆலமர விழுதைப் பிடித்துக் கொண்டு பறந்து பறந்து செல்லும் எம்ஜிஆரின் அழகோ அழகு தான். இந்தப்படத்தை இந்தக் காட்சிகளுக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் கண்டு ரசிக்கலாம்.
1967ல் வெளியானது. இந்தப்படத்தை இயக்கியவர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. எம்ஜிஆருடன், ஜெயலலிதா, சரோஜாதேவி, அசோகன், நம்பியார், மனோகர, பி.எஸ்.வீரப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார்.
ஆட வா...ஆட வா..., என்னை பாடவைத்தவன், முகத்தை பார்த்ததில்லை, புத்தம் புதிய, வேட்டையாடு விளையாடு, எத்தனை காலம் தான் ஆகிய பாடல்கள் உள்ளன.
சக்கரவர்த்தி திருமகள்
1957ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான படம். அஞ்சலி தேவி, வரலட்சுமி, வீரப்பா, தங்கவேலு, சகுந்தலா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார். ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். படத்தில் அருமையான பாடல்கள் உள்ளன.
கலைவாணர் கேள்விகள் கேட்க எம்ஜிஆர் பதில் சொல்லும் பாடல் முத்தாய்ப்பாக இருந்தது. காதல் என்னும் சோலையிலே, ஆட வாங்க அண்ணாத்தே, எல்லை இல்லாத இன்பத்திலே, பொறக்கும் போது, கண்ணாளனே, சொல்லாலே விளக்க முடியல உள்ளிட்ட பாடல்கள் படத்தில் ரசனைக்கு விருந்து.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
1978ல் வெளியான இந்தப்படத்தை நடித்து இயக்கியுள்ளார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், வீரப்பா, லதா, பத்மபிரியா, எஸ்.வி.சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். மாங்கல்யம், வீர மகன் போராட, தாயகத்தின் சுதந்திரமே, அமுத தமிழில், தென்றலில் ஆடிடும் ஆகிய பாடல்கள் உள்ளன.
ராஜா தேசிங்கு
1960ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் டி.ஆர்.ரகுநாத். எம்ஜிஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, தங்கவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்.
ஆதிகடவுள் ஒன்றுதான், காதலின் பிம்பம், மன்னவனே செஞ்சி, கானாங்குருவி காட்டுப்புறா, வாழ்க எங்கள், வந்தான் பாரு ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.