மது, மாது வலையில் சிக்காத எம்.ஜி.ஆர்!.. பெட் கட்டி ஜெயித்த ஒரு சம்பவம்!…

mgr
நடிகர் எம்.ஜி.ஆர் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். கெட்டப்பழக்கம் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருந்தவர் இவர். தனது உடம்பே தனது மூலதனம் என எண்ணிய அவர் தொடர்ந்து உடற்பயிற்சியை செய்து வந்தார். சினிமாவில் நடிக்க துவங்கிய துவக்க காலத்தில் ஒரு சில படங்களில் மட்டுமே மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தார்.
ஆனால், எப்போது அவருக்கென ரசிகர் கூட்டம் உருவாகியதோ அப்போது முதல் தான் நடிக்கும் படங்களில் சிகரெட் மற்றும் மது அருந்துவது போல காட்சிகளில் நடிப்பதில்ல என்பதில் உறுதியாக இருந்தார். கடைசிவரைக்கும் அதை பின்பற்றினார். சினிமாவில் மட்டுமில்லை நிஜ வாழ்விலும் அவருக்கு அந்த பழக்கம் இல்லை. எம்.ஜி.ஆர் மட்டுமே அப்படி இருந்தார் என சொல்ல வேண்டும். எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் வரும் நடிகர்களையும் சினிமா சீக்கிரமாகவே கெடுத்துவிடும்.
ஆனால், எம்.ஜி.ஆரை எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்ல முடியும். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்தவர் முக்தா சீனிவாசன். இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தபோதே எம்.ஜி.ஆருடன் பழக்கம் இருந்தது.

ஒருமுறை எம்.ஜி.ஆர் நடிகுக்ம் ஒரு படத்தில் சீனிவாசன் உதவி இயக்குனராக வேலை செய்ய வந்தார். அவரை பார்த்த எம்.ஜி.ஆர் ‘நீ இந்த படத்தில் வேலை செய்ய வந்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்று என் இரவு என் வீட்டிற்கு சாப்பிட வா’ என அழைத்திருக்கிறார். சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்ட்டிருந்த சீனிவாசன் எம்.ஜி.ஆரிடம் ‘இந்த கம்பெனியில் மது ஆறாக ஓடும், நடிகர்களுக்கு பெண்களையும் அனுப்புவார்கள். உங்களை பற்றி எனக்கு தெரியும். ஆனாலும் நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை’ என சொல்லி சிரித்திருக்கிறார்.
அதற்கு எம்.ஜி.ஆர் ‘என்னை பற்றி உனக்கு தெரியும். நான் எதற்கும் மயங்க மாட்டேன்’ என சொல்ல, சீனிவாசனோ ‘பார்ப்போம்’ என நக்கலாக சிரிக்க எம்.ஜி.ஆர் ‘சரி. நீ இந்த படம் முடியும் வரை என்னுடன்தானே இருக்கப்போகிறாய். 100 ரூபாய் பந்தயம்’ என்றார். சீனிவாசன் சொன்னது போலவே படம் முடியும் வரை எம்.ஜி.ஆருக்கு பல வலைகள் விரிக்கப்பட்டது. ஆனால், அதில் அவர் சிக்கவில்லை.
படத்தின் சென்சார் முடிந்து ரிலீஸுக்கும் தயாரானது. அப்போது எம்.ஜி.ஆரை சந்தித்த சீனிவாசன் ‘படத்தில் ஒரு கட் கூட இல்லை’ என சொல்ல, எம்.ஜி.ஆரோ ‘அதெல்லாம் இருக்கட்டும். எங்கே 100 ரூபாய்?’ என கேட்டிருக்கிறார். எதுவும் புரியாமல் சீனிவாசன் முழிக்க ‘மது, மாது என எதிலும் நான் சிக்கினேனா?’ என கேட்க சீனிவாசனிடம் பதில் இல்லை. இந்த சம்பவம் பற்றி ஊடகத்தில் பேசிய சீனிவாசன் ‘அந்த கம்பெனில் எம்.ஜி.ஆருக்கு செய்ததை 10 சதவீதம் வேறு நடிகர்களுக்கு செய்திருந்தாலே அவர்கள் விழுந்திருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் அதில் சிக்கவில்லை’ என பேசியிருக்கிறார்.