நடிகைக்காக பல மாதங்கள் காத்திருந்த எம்.ஜி.ஆர் - என்ன காரணம் தெரியுமா?...
நாடகங்களில் நடித்து சினிமாவில் நுழைந்து திரையுலகையே ஆண்டவர் எம்.ஜி.ஆர். 50,60 களில் முன்னணி நடிகராக இருந்தவர். சிவாஜி செண்டிமெண்ட் கலந்த கதைகளில் நடித்து வந்தால், எம்.ஜி.ஆர் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். நல்ல கதையம்சம் கொண்ட குடும்பபாங்கான கதைகளை விரும்பும் ரசிகர்கள் சிவாஜி படம் பார்க்க போனால், சண்டை காட்சிகளை விரும்பும் ரசிகர்கள் எம்.ஜி.ஆர் படங்களை பார்க்க போனார்கள்.
எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. அதுவும் கதாநாயகி வாய்ப்புக்காக பெரிய போட்டியே நடக்கும். ஆனால், ஒரு நடிகைக்காக எம்.ஜி.ஆர் காத்திருந்த கதையும் திரையுலகில் நடந்தது.
நாடோடி மன்னன் படத்திற்கு பின் எம்.ஜி.ஆர் மிகவும் பிஸியான நடிகராக மாறிவிட்டார். எனவே, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ‘அதிக படங்களில் நடித்து வரும், அதாவது என்னை விட பிஸியான நடிகைகளை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டாம். எனக்கு எப்போது கால்ஷீட் இருக்கிறதோ அப்போது கூப்பிட்டால் உடனே வந்து நடிக்கும் நடிகைகளையோ, அல்லது புதுமுக நடிகைகளையே மட்டும் என் படத்தில் எனக்கு ஜோடியாக போடுங்கள். இதை ஆணவத்தில் சொல்லவில்லை. நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறேன். எனவே, நடிகைகளின் கால்ஷீட் பிரச்சனையில் நான் நடிக்கும் படம் எதுவும் பாதிக்கக்கூடாது என நினைக்கிறேன்’ என சொன்னார்.
அதன்பின் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தில் புதுமுக நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார் சரோஜா தேவி. அப்படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்து எம்.ஜி.ஆரின் கால் உடைந்துவிட்டது. எனவே, ஒரு வருடம் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த இடைவெளியில் சரோஜாதேவி பிஸியான நடிகையாக மாறிவிட்டார். எம்.ஜி.ஆர் மீண்டும் நடிக்க வந்ததும் சரோஜா தேவியால் ‘திருடாதே’ படத்திற்கு சரியாக கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனவே, அவரால் எப்போது வரமுடிகிறதோ அப்போது நடிக்கும் நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.