உதயசூரியன்னு என்கிட்ட சொல்லி சீன் போடாத!.. எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்ட எம்.ஆர்.ராதா!...
Mgr: எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சிறு வயது முதலே நாடகத்தில் நடிக்க போனவர்கள். ஆனால், அவர்களுக்கே சீனியர் எம்.ஆர்.ராதா. அவரும் சிறு வயதிலேயே நாடகத்திற்கு போய்விட்டார். நாடகங்களில் பல வேடங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
வாலிபரான பின் தனியாக நாடகம் போட துவங்கினார் எம்.ஆர்.ராதா. இவரின் நாடகங்களில் கடவுள் மறுப்பும், நாத்திக சிந்தனையும் அதிகம் இருக்கும். குறிப்பாக பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பேசுவார் எம்.ஆர்.ராதா. கடவுளை கடுமையாக விமர்சனம் செய்வார்.
ஏனெனில், அவர் பெரியாரின் ரசிகராக இருந்தவர். அதனால், அவரின் நாடகங்களில் புரட்சிகரமான கருத்துக்கள் இருக்கும். இதனால் பல எதிர்ப்புகளையும் அவர் சந்தித்திருக்கிறார். அவரை நாடகம் நடத்தவிடாமல் சிலர் போராட்டம் செய்வார்கள். அப்போதெல்லாம், வெளியே இந்த நாடகம்தான் நடக்கிறது என சொல்லிவிட்டு, ரசிகர்கள் உள்ளே வந்தபின் எதிர்ப்பை சந்தித்த நாடகத்தையே போடுவார் எம்.ஆர்.ராதா.
எப்போதும் யாருக்காகவும் தனது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டார் எம்.ஆர்.ராதா. அதேபோல், யாருக்காகவும் பயப்படவும் மாட்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே அவரை அண்ணே என்றுதான் அழைப்பார்கள். இருவரின் படங்களிலும் நடித்திருக்கிறார் எம்.ஆர்.ராதா.
தொழிலாளி படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார் எம்.ஆர்.ராதா. அந்த படத்தில் எம்.ஆர்.ராதாவை பார்த்து எம்.ஜி.ஆர். பேசுவது போல ஒரு காட்சி. வசனத்தை ஆருர்தாஸ் எழுதியிருந்தார். 'கூட்டுறவு பஸ் சர்வீஸ்தான் நமக்கு வெளிச்சம் தரும் நம்பிக்கை நட்சத்திரம்' என்பது வசனம். ஆனால், அப்போது ஸ்வதந்த்ரா கட்சியின் சின்னமாக நட்சத்திரம் இருந்தது. எனவே, அதை பேச விரும்பாத எம்.ஜி.ஆர் அந்த வசனத்தை மாற்ற சொன்னார். ஆருர்தாஸ் அதை உதயசூரியன் என மாற்றினார்.
எம்.ஜி.ஆர் உதயசூரியன் என சொன்ன பின் கேமரா எம்.ஆர்.ராதா முகத்தை காட்டிவிட்டு அந்த காட்சி முடியும். ஆனால், அதற்கு எம்.ஆர்.ராதா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். 'ராமச்சந்திரா உதயசூரியனை என் முகத்தில் கொண்டு வந்து சீன் போடாதே.. ஏற்கனவே எழுதிய நம்பிக்கை நட்சத்திரம் என்றே பேசு’ என சொன்னார். அதன்பின் தேவர் வந்து சமாதானம் செய்தார். ராமச்சந்திரன் என்ன வசனம் பேசட்டும். ஆனால், என்னை பார்த்து சொல்வது போல காட்டக்கூடாது என எம்.ஆர்.ராதா சொன்னார்.
தேவரின் யோசனைப்படி எம்.ஜி.ஆர் உதயசூரியன் என்றே பேச கேமரா ஆங்கிள் சுவற்றில் உள்ள முருகன் கடவுள் மீது முடிவது போல காட்சி எடுக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் விரும்பி சாப்பிடும் அந்த உணவு!. அதுவே அவரின் உயிருக்கு உலை வச்சிடுச்சே!…