ஒருதலைக் காதலின் வலியை காட்டிய நடிகர்!. 26 வருடங்கள் திரையுலகை கலக்கிய முரளி...
தமிழ்த்திரை உலகில் அறிமுகமான முதல் படத்தையே வெற்றிப்படமாக்கியவர்கள் வெகு சிலர் தான். அப்படிப்பட்ட வெற்றியைக் கொடுத்தவர் தான் நடிகர் முரளி. இவர் 1984ல் பூவிலங்கு படத்தில் அறிமுகமானார்.
2010ல் பாணா காத்தாடி தான் இவரது கடைசி படம். இந்தப் படத்தில் தான் அவரது மகன் அதர்வாவும் அறிமுகம். 26 ஆண்டுகள் வரையிலும் நடித்த இவர் கொஞ்சம் கூட மார்கெட் இறங்காமல் பார்த்துக் கொண்டார். இவரது மகன் அதர்வா தற்போது பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார்.
காமெடி, அதிரடி, குடும்பம், காதல், கிராமம், நகரம், வரலாறு என எந்தக் கதைகளமாக இருந்தாலும் அதில் செட் ஆகி விடுவார் முரளி. இவரது பிளஸ் பாயிண்டே யதார்த்தமாக நடிப்பது தான். மற்றொன்று இனிமையான குரல்.
பெங்களூரைச் சேர்ந்த முரளிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவரது தந்தை சித்தலிங்கையா கன்னட திரையுலகில் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர். கடல் பூக்கள் படத்திற்கு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் முரளி.
இவர் நடித்த படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாக இருக்கும். 1995ல் வெளியான தொண்டன் படத்திற்காக முதன்முதலில் நட்டநடு சென்டரு என்ற பாடலை சொந்தக்குரலில் பாடினார். இவர் தனது கதாபாத்திரத்தைத் தான் பார்ப்பாரே தவிர, சக நடிகருடன் இணைந்து நடிக்கத் தயங்கியதே இல்லை.
இவர் நடித்த படங்களில் பகல் நிலவு, கீதாஞ்சலி, மண்ணுக்குள் வைரம், துளசி, குடும்பம் ஒரு கோவில், நம்ம ஊரு பூவாத்தா, நினைவுச்சின்னம், புதுவசந்தம், சாமி போட்ட முடிச்சு, இதயம் ஆகிய படங்கள் அருமையானவை. குறிப்பாக இதயம், காலமெல்லாம் காதல் வாழ்க, உன்னுடன் உள்ளிட்ட திரைப்படங்களில் காதலை சொல்ல முடியாத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
சிவாஜி, விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், மம்முட்டி, பிரபுதேவா, பார்த்திபன், சூர்யா ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த அத்தனை படங்களும் செம மாஸ் ஹிட்டாயின. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் தான் முரளியின் உடல்நிலையைப் பாதித்து இளவயதிலேயே அதாவது தனது 46வது வயதிலேயே அவர் இந்த மண்ணை விட்டு மறைவதற்கு காரணமானது. அவர் மறைந்தபோதும் இன்றும் அவர் நடித்த இதயம் போன்ற படங்கள் நம் நெஞ்சை விட்டு காலத்தால் அழியாதவை தான்.