குருவுக்கு செய்த நன்றிக்கடன்!..வந்த படவாய்ப்புகளை எல்லாம் இழக்க துணிந்த முத்துராமன்!..
அந்த கால சினிமாவில் அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகக்கூடிய ஒரு நல்ல மனிதர் நடிகர் முத்துராமன். ஹீரோவாக நடித்ததை விட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த படங்கள் ஏராளம்.
யாரிடமும் கர்வமாக இருக்கமாட்டார். அனைவரையும் சமமாக மதிக்கக்கூடியவர். மேலும் சினிமாவிற்குள் நுழைந்து 10 வருடங்கள் கழித்து தான் லட்ச ரூபாய் சம்பளத்தை முத்துராமன் பெற்றார். ஹீரோவாக நடித்திருந்தாலும் ஆயிரக்கணக்கில் தான் சம்பளமாம்.
ஜெயலலிதாவுடன் திருமாங்கல்யம் என்ற படத்தில் ஜோடியாக நடித்த முத்துராமன் அந்த படத்தில் தான் லட்ச ரூபாய் சம்பளத்தை முதன் முதலாக பெற்றிருக்கிறார். இவர் இயக்குனர் ஸ்ரீதரை தன்னுடைய ஆஸ்தான குருவாக ஏற்றுக்கொண்டவர். நாடகங்களில் நடித்து கொண்டிருந்த முத்துராமனை முதன் முதலில் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் மூலம் ஒரு அந்தஸ்தான நடிகராக மாற்றிய பெருமை ஸ்ரீதரையே சேரும். ஸ்ரீதர் முத்துராமனை வைத்து பல படங்களை இயக்கியிருக்கிறார். ஸ்ரீதரின் தத்துப்பிள்ளையாகவே முத்துராமன் மாறியிருக்கிறார்.
பல ஹிட் படங்களை கொடுத்த முத்து ராமனுக்கு பல படங்களின் வாய்ப்புகள் வரத்தொடங்கியது. எல்லா படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து கூடவே ஒரு கண்டீசனையும் போட்டிருக்கிறார். உங்கள் பட கால்ஷீட் நேரத்தில் ஸ்ரீதரின் பட வாய்ப்பு வந்தால் நான் அவர் படத்தில் நடிக்க போய் விடுவேன். அவர் படத்தை முடித்து கொடுத்து விட்டு தான் மீண்டும் இங்கு வந்து நடிப்பேன் என்று குருவுக்காக மற்ற படங்களின் வாய்ப்பையும் இழக்க தயாராக இருந்திருக்கிறார் முத்து ராமன். இந்த பதிவை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.