சிவாஜி ஒரு பாம்பு!.. மேடையிலேயே சொன்ன பிரபல நடிகர்!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சம்பவம்....
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் சிவாஜி. நாடகங்களில் நடிக்க துவங்கி பின் சினிமாவில் நுழைந்தவர். அறிமுகமான முதல் படத்திலிருந்தே சிறப்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். எம்.ஜி.ஆர் சண்டை படங்களில் நடித்தால் சிவாஜி நல்ல கதையம்சம் கொண்ட, குடும்பபாங்கான, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்களால் நடிகர் திலகம் என அழைக்கப்பட்டார்.
பல கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் சிவாஜியாக மட்டுமே இருப்பார். ஏழை, விவசாயி, சாமானியன், குடும்ப தலைவன், காவல் அதிகாரி, ஜமீன்தார், பணக்காரர், நீதிபதி, கடவுளின் அவதாரங்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள், இதிகாசங்களில் வந்த கதாபாத்திரங்கள் என அவர் ஏற்று நடித்ததுபோல் வேறு எந்த நடிகரும் நடித்ததில்லை என்றே கூறலாம். பல கதாபாத்திரங்களுக்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்தார்.
ஒருமுறை தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் தமிழகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் சிவாஜி, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய நாகேஸ்வரராவ் ‘சிவாஜி ஒரு பாம்பு’ என பேச துவங்க எல்லோரும் அதிர்ச்சியானார்களாம். சிவாஜியும் அவரை பார்க்க, பேச்சை தொடர்ந்த நாகேஸ்வர ராவ் ‘நானும் சிவாஜியும் ஒரே உயரம்தான். ஆனால், அவருக்கு இருக்கும் கம்பீரரமான குரல் எனக்கு இல்லை.
என்னால் சில வேடங்களை மட்டுமே போட முடியும். ஆனால், சிவாஜி எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடலாம். என்ன வேடம் என்றாலும் அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார். பாம்பை ஒரு கூடையில் வைத்தாலும் அதற்குள் சுருண்டு கொள்ளும். ஒரு பெரிய கோணி பையில் வைத்தாலும் சரி, ஒரு சிறிய டப்பாவில் வைத்தாலும் சரி, அதற்கு ஏற்றது தன்னை வடிவமைத்து கொள்ளும். சிவாஜியும் அப்படித்தான். எந்த வேடம் என்றாலும் சிவாஜி அதுபோல தன்னை மாற்றிக்கொள்வார்’ என பேசியதும் கைதட்டல் பறந்தது.
இந்த தகவலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஊடகம் ஒன்றில் பேசும்போது தெரிவித்துள்ளார்.