எம்.ஜி.ஆர் கண்ணில் பட்ட வாள்!.. நம்பியார் அடித்த கமெண்ட்!.. சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம்!…
எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சினிமாவில் மட்டுமே எதிரிகள். ஆனால், நிஜத்தில் நல்ல நண்பர்கள். எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களில் வில்லனாக நம்பியார் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் ஹீரோ எனில் வில்லன் நம்பியார்தான் என்பது ரசிகர்களுக்கே பழகிப்போகும் அளவுக்கு பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பல கருப்பு வெள்ளை படங்களில் எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போடும் வில்லனாக நம்பியார் நடித்துள்ளார்.
அரசிளங்குமாரி திரைப்படத்தில் ஒரு ஆக்ரோஷமான சண்டை காட்சியை படம் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் புருவத்தின் கீழ் பட்டு அவருக்கு ரத்தம் கொட்டியது. உடனே, உதவியாளர் ஓடி வந்து துணியால் அழுத்தி பிடித்து கொண்டார். நம்பியாரிடம் ‘கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்யலாமே’ என அவர் கேட்க அதற்கு எம்.ஜி.ஆர் ‘அவருக்கு என் மேல் கோபமில்லை. அவரின் வாளுக்குதான் என் மேல் கோபம்’ என சொல்லி எம்.ஜி.ஆர் அந்த சூழ்நிலையை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.
அப்போது எம்.ஜி.ஆரிடம் நம்பியார் ‘நீ என்னிடம் நன்றி சொல்ல வேண்டும்’ என சொன்னாராம். கண்ணில் குத்திவிட்டு நன்றியும் சொல்ல சொல்கிறாரே யோசித்த எம்.ஜி.ஆர் ‘நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்?’ என கேட்க, நம்பியார் ‘இயக்குனர் சொன்ன இடத்தில் உன்னை குத்தாமல் விட்டேனே அதுக்கு’ என்றாராம். ‘இயக்குனர் எந்த இடத்தில் குத்த சொன்னார்?’ என எம்.ஜி.ஆர் கேட்க ‘நெஞ்சில் குத்த சொன்னார்’ என நம்பியார் சொல்ல எம்.ஜி.ஆரின் சிரிப்பில் அரங்கமே அதிர்ந்ததாம்.