கமல் சார் அதை எப்படி பண்ணினார்னு தெரியல!.. அந்த படம் பற்றி நெகிழ்ந்து பேசும் நானி!…

நடிகர் நானி தெலுங்கில் முக்கிய நடிகர்களில் ஒருவர். இவருக்கு நேச்சுரல் ஸ்டார் என்கிற பட்டமும் இருக்கிறது. வழக்கமான தெலுங்கு மசாலா கதைகளில் நடிக்காமல் நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் இவர். இதனால், இவரை தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
வெப்பம், ஈ போன்ற சில நேரிடையான தமிழ் படங்களிலும் நானி நடித்திருக்கிறார். இவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நீண்ட நட்பு உள்ளது. பல தமிழ் பட இயக்குனர்கள் நானியை வைத்து படமெடுக்க முயற்சி செய்து வருகிறார்கள். அவருக்கும் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஈ படத்தில் நானி நடித்திருந்தார். இந்த படம் தமிழிலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. பிரதீப் ரங்கநாதன் கூட கோமாளி படத்திற்கு பின் நானியை சந்தித்து ஒரு கதை சொன்னாராம். ஆனால், என்ன காரணமோ அது டேக் ஆக வில்லை. பிரதீப் ஹீரோவாக மாறியதை ஆச்சர்யமாக பார்க்கிறேன் என நானி கூறியிருக்கிறார்.
அவரின் ஹிட் 3 திரைப்படம் வருகிற மே 1ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக உருவாகியுள்ளது. எனவே, அந்த படத்தை புரமோஷன் செய்வதற்காக தமிழக ஊடகங்களுக்கு நானி பேட்டி கொடுத்து வருகிறார்.
இந்த பேட்டிகளில் அவர் சிலாகித்து பார்த்த தமிழ படங்கள் பற்றி பேசி வருகிறார். 1000 கோடி போட்டு ஒரு படத்தை நாம் எடுக்க முடியும். ஆனால், மெய்யழகன் போல ஒரு படத்தை எடுப்பது கஷ்டம். அந்த படம் ஒரு மேஜிக் என பாராட்டியிருந்தார். அதேபோல், கமல்ஹாசன் பற்றி மிகவும் ஆச்சர்யப்பட்டு பேசினார்.

விருமாண்டி படத்தில் ஒரு கோர்ட் சீனில் தூங்கிக்கொண்டிருக்கும் கமல் சார் தீடிரென முழிப்பார். வாயெல்லாம் ஈரமாக இருக்கும். அதை கையால் துடைப்பார். அந்த காட்சியை கட் செய்து என் போனில் வைத்திருக்கிறேன். எவ்வளவு முறை பார்த்தாலும் அது நடிப்பு போலவே இருக்காது. அதை அவர் எப்படி செய்தார் என தெரியவில்லை. அவரை நேரில் பார்த்தால் கேட்க வேண்டும்?. ஒரு படத்தில் நானும் அதுபோல முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், அவரை போல செய்ய முடியவில்லை’ என ஆச்சர்யப்பட்டு பேசியிருக்கிறார்.