இளையராஜா குழுவில் கிடாரிஸ்ட்!. சினிமாவில் அசத்தல் வில்லன்!.. ரகுவரனின் நினைவு நாள்!...

by சிவா |
raguvaran
X

Actor Raguvaran: நம்பியார் துவங்கிய பாலிவுட் நடிகர்கள் வரை தமிழ் சினிமாவில் பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் சிலரே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதில் ரகுவரன் முக்கியமானவர். இவரின் குரல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். சுண்டி இழுக்கும் காந்த குரல் அவருடையது. அதை வைத்தே பல படங்களிலும் வில்லத்தனம் செய்தார்.

கேரளா மாவட்டம் கொல்லங்கோடு எனும் இடத்தில் 1958 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் ரகுவரன். தந்தையின் வியாபாரம் காரணமாக கோயம்பத்தூருக்கு குடிபெயர்ந்தது இவரின் குடும்பம். இளங்கலை பட்டம் பெற்ற ரகுவரன் 1982ல் ரிலீஸான ஏழாவது மனிதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால், வில்லன் வேடம்தான் அவரின் முகத்திற்கும், குரலுக்கும் செட் ஆனது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ரகுவரனுக்கு ஆஜானுபாகுவான உடம்பு கிடையாது. ஆனால், பார்வை மற்றும் குரலாலேயே மிரட்டிவிடுவார். ரகுவரனை வில்லனாக ரசிக்கவே ஒரு கூட்டம் இருந்தது. எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இவரை ரசிப்பார்கள். அதுதான் அவரின் பலம். நிறைய நடிகர்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதில் பாட்ஷா படத்தில் ரகுவரன் ஏற்ற மார்க் ஆண்டனி வேடம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அந்த பெயரில் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு படத்தையும் எடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். 90களில் வில்லனாக கலக்கி கொண்டிருந்தபோதே குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். லவ் டுடேவில் விஜயின் அப்பாவாக வந்து இயல்பான நடிப்பை கொடுத்து பாராட்டை பெற்றார். ஆஹா படத்தில் இவர் ஏற்ற வேடத்தை எந்த நடிகரும் செய்ய முடியாது.

வில்லன் என்பதற்குள் மட்டும் அடங்காமல் அப்பா, அண்ணன், அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி என பல படங்களிலும் அசத்தலாக நடித்து கலக்கியவர்தான் ரகுவரன். எல்லோருக்கும் பிடித்த நடிகர்களில் ரகுவரன் முக்கியமானவர். நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உண்டு.

இசையில் ஆர்வம் கொண்டவர் ரகுவரன். சினிமாவுக்கு வருவதற்கு முன் இளையராஜாவின் குரு தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்றுக்கொண்டவர் ரகுவரன். லண்டன் டிரைனிட்டி பல்கலைக்கழகத்தில் இசை பற்றி படித்து பட்டம் பெற்றவர் இவர். அதன்பின் இளையராஜாவின் இசைக்குழுவில் கிடார் வாசிப்பவராக வேலை செய்திருக்கிறார். அதோடு, அவரே இசையமைத்து பாடி சில பாடல்களை உருவாக்கியிருக்கிறார். மனைவி ரோகிணியை பிரிந்த நிலையில் 2008ம் வருடம் மார்ச் 19ம் தேதி தனது வீட்டிலேயே மரணமடைந்தார்.

ரசிகர்களால் மறக்க முடியாத ரகுவரனுக்கு இன்று நினைவு நினம்!..

Next Story