திரையுலகில் தமிழ் வளர்த்தவர்...! மிகப்பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்தவர் சிவாஜி...!! நடிகர் ராஜேஷ் புகழாரம்

by sankaran v |   ( Updated:2022-12-08 16:38:52  )
திரையுலகில் தமிழ் வளர்த்தவர்...! மிகப்பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்தவர் சிவாஜி...!! நடிகர் ராஜேஷ் புகழாரம்
X

Sivaji, Rajesh

நடிகர் ராஜேஷ் தமிழை அழகாக உச்சரிப்பார். குணச்சித்திர நடிப்பிலும் இவர் முத்தாய்ப்பாக நடித்து அசத்துவார். நிறுத்தி நிதானமாகப் பேசும் அழகு ஒருசில நடிகர்களுக்கே சொந்தம். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் ராஜேஷ் என்றால் மிகையில்லை. இவர் சிம்மக்குரலோன் செவாலியே சிவாஜிகணேசன் பற்றி தனது கருத்துகளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Sivaji2

தமிழ் மூன்றெழுத்து. சிவாஜி என்பதும் மூன்றெழுத்து. சிவாஜி என்ற மூன்றெழுத்தில் நடிப்பு என்ற இலக்கணம் அடங்கி இருந்தது. தமிழ்த்திரையுலமானாலும் சரி. தமிழக அரசியலானாலும் சரி. அண்ணன் சிவாஜியை ஒதுக்கி விட்டு எழுத முடியாது.

சிவாஜி அண்ணனுக்கு பல பக்கங்களை ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கும், தமிழ்த்திரை உலகுக்கும் ஏன் இந்திய திரை உலகுக்கும் பெருமை சேர்த்தவர் அண்ணன் சிவாஜி.

அண்ணனின் தமிழ் உச்சரிப்பைப் பார்த்து தமிழை உச்சரிக்கக் கற்றுக் கொண்டவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். திராவிட இயக்கங்கள் மேடையில் வளர்த்த தமிழை, அண்ணன் திரை உலகில் வளர்த்தார்.

Sivaji3

திராவிடர்களுக்கான முக அமைப்பு, சிம்மக்குரல், நடை, உடை, பாவனைகள், கதாபாத்திரங்களுக்கேற்ற பல்வேறு விதமான நடைகள், எந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அதற்குப் பொருந்தும் முக அமைப்பு, மொத்தத்தில் அவருக்கு எந்தவிதமான ஒப்பனை செய்தாலும் பொருத்தமாக இருக்கும்.

ஆனால் அண்ணனுக்கு எப்படிப்பட்ட ஒப்பனையும் வேடமும் உடை அலங்காரமும், சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும். விதவிதமான உடைகள் பொருத்தமாக இருக்கும்.

விக், விதவிதமான மீசைகள், தாடிகள் எல்லாமே கனகச்சிதமாகப் பொருந்தும். கதாபாத்திரத்திற்கும், சூழ்நிலைக்கும், இடத்திற்கும் ஏற்ப குரலைப் பயன்படுத்துவார்.

பாட்டிற்கு ஏற்றபடியும், பின்னணிப் பாடகர்களுக்கு ஏற்றபடியும் மிகச்சிறப்பாக வாயசைப்பார். ஒரு நடிகன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர். எங்களைப் போன்ற நடிகர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவர்.

ஒருவர் தொழிலிலும் மக்கள் மத்தியிலும், வாழ்க்கையிலும் சிறந்து விளங்குவது மிக மிக கடினம். அதிலும் நற்பெயர் எடுத்தவர் அண்ணன் சிவாஜி.

அவரது வாழ்க்கை தமிழ்ப் பண்பாட்டை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது. மிகப்பெரிய குடும்பத்தை சிதறாமல் கட்டிக் காத்த பெருமை அவரையேச் சாரும்.

Sivaji

அப்பா, நல்ல மனைவி, அண்ணன், தம்பி, தங்கை, மகன்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் போன்ற அனைத்து பாக்கியங்களையும் முறைப்படி ஒழுங்காகப் பெற்றவர் சிவாஜி. அவரது செல்வமும், செல்வாக்கும் கடைசி வரை இருந்தது தான் அவரது தனிச்சிறப்பு.

நடிகர் ராஜேஷ் சிவாஜியுடன் சின்ன மருமகள், மண்ணுக்குள் வைரம், சிம்ம சொப்பனம், எழுதாத சட்டங்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story