விஜயின் கட்சியில் இணையும் ரஜினி ரசிகர்கள்?!.. சூப்பர்ஸ்டாரை நம்பி ஏமாந்துதான் மிச்சம்!..
நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கியது. தனியாக கட்சி துவங்கி மக்களின் ஆதரவை பெற்று மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு பின் சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் என சிலர் கட்சி துவங்கினார்கள். ஆனால், அது வொர்க் அவுட் ஆகவில்லை.
வெற்றி கிடைக்கவில்லை என்பதால் சிவாஜி கணேசனே தனது கட்சியை கலைத்ததுதான் தமிழக அரசியல் வரலாறு. எம்.ஜி.ஆருக்கு பின் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினி ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து சொல்ல ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதையே தெளிவாக சொல்லாமல் அவரின் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து குழப்பி வந்தார் ரஜினி. அரசியலுக்கு வருவது தொடர்பாக பலரிடமும் பல வருடங்கள் ஆலோசனை செய்தார். திடீரென ஒரு நாள் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என சொன்னார் ரஜினி.
உடனே கட்சி வேலைகள் வேகமெடுத்தது. ஆனால், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ‘மருத்துவர்கள் ஆலோசனைப்படி என்னுடைய உடல்நிலை காரணமாக என்னால் அரசியலுக்கு வரமுடியாது’ என சொல்லி அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்களை ஏமாற்றினார்.
ரஜினியின் கட்சியில் இணைந்தால் அரசியலில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்ட சில ரசிகர்கள் இப்போது விஜயின் கட்சியில் இணைந்து வருவதாக செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு விஜய் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்? என்ன பதவி கொடுப்பார் என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.
தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ள விஜய் இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசியல் ஆதாயத்தை விரும்பும் ரஜினி ரசிகர்கள் விஜயின் கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.